இலங்கைசெய்திகள்

பிரதமர் தலைமையில் 2022 புத்தாண்டில் பிரதமர் அலுவலக பணிகள் ஆரம்பம்!

new year work

இரண்டாயிரத்து இருபத்து இரண்டாம் ஆண்டிற்கான பிரதமர் அலுவலக பணிகளை ஆரம்பிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது பிரதமரின் செயலாளர் காமினி செனரத் அவர்கள் தேசிய கொடியை ஏற்றியதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு உத்தியோகப்பூர்வ நிகழ்வு ஆரம்பமாகியது.

முதலில் தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து பிரதமர் அலுவலக ஊழியர்கள் அரச உறுதிமொழி கூறினர்.

புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவித்து நாட்டின் சவால்களை வெற்றி கொள்வதற்கு அரச சேவையின் வினைத்திறன் உதவியுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமரின் செயலாளர் காமினி செனரத் அவர்கள், புத்தாண்டின் சவால்களை வெற்றி கொள்வதற்கு பணிக்குழாம் ஊழியர்கள் மற்றும் அனைத்து அரச சேவையாளர்களினதும் அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமரின் செயலாளர் காமினி செனரத் அவர்கள்,

பல சவால்களுக்கு மத்தியில் 2021ஆம் ஆண்டில் நாங்கள் பணியாற்ற வேண்டியிருந்தது. 2020 முதல் இந்த சவால்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். கடந்த இரண்டு வருடங்களாக,இந்த நாடு 18 மாதங்களுக்கும் மேலாக அவ்வப்போது மூடப்பட்டது உங்களுக்குத் தெரியும். இவ்வாறானதொரு சவாலான காலப்பகுதியில் நாம் எமது கடமைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

கொவிட் தொற்றுநோய்க்கு மத்தியிலும் பிரதமர் அலுவலகம் சிறப்பான பணியை செய்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். குறிப்பாக கொவிட்; தொற்றுநோய்க்கு முகங்கொடுத்து நாடு செயலற்ற நிலையில் இருக்கும் நேரத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காகவும் மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு செயலணியை ஸ்தாபித்தார், அந்த செயலணி நமது பிரதமர் அலுவலகத்தில் இருந்து செயல்பட்டது. இந்த அதிகாரிகள் அனைவரும் இரவு பகலாக இந்த அலுவலகத்திற்கு வந்து அந்த சவால்களை முழு பலத்துடன் எதிர்கொண்டு நாட்டிற்காக தங்கள் சேவையை செய்ததை நான் அறிவேன்.

2022-ம் ஆண்டைப் பார்த்தால், இன்றிலிருந்து நமக்குப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டை புதிய முகத்துடன் தொடங்க நாம் அனைவரும் உறுதியாக இருந்தால் நல்லது. கொவிட் தொற்றுநோயின் உலகளாவிய சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் உறுதியாக உள்ளது. இன்று நாம் கொவிட் தொற்றுநோயை மிகக் குறைந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம் என்பது உங்களுக்குத் தெரியும். நான் பார்த்த வரையில், நேற்று கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை சுமார் முந்நூறு ஆகும்.

எனவே இது மிகவும் நல்ல நிலை. எமது நாட்டில் அரச சேவையின் வினைத்திறன் காரணமாக எம்மால் இதனை அடைய முடிந்தது. அவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்தார்கள். வலுவான அரச சேவையின் காரணமாகத்தான் கொவிட் தொற்றுநோயை இவ்வளவு திட்டமிட்ட முறையில் சமாளிக்க முடிந்தது. இன்று உலகின் மற்ற பகுதிகளைப் பாருங்கள். பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. அவ்வாறான சூழ்நிலையிலும் நமக்கு இன்று இதுபோன்ற திட்டமிடலின் மூலம் அதற்கு முகங்கொடுக்க கூடியதாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த அவர்களினால் சுபீட்சமான இலங்கையில் உற்பத்தித் திறன் கொண்ட குடிமக்களையும் பசுமையான நாட்டையும் உருவாக்குவதற்கான அரசாங்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரச சேவைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் முக்கிய உரையை ஆற்றினார்.

மஹிந்த சிந்தனையில் ஆரம்பிக்கப்பட்ட பல விடயங்களை நாம் இன்னும் நம்பியிருக்கின்றோம். 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் எழுச்சியால் எங்களால் பலன்களை பெற முடியவில்லை. குறிப்பாக பிரதமரின் தலைமையிலான இந்த அரசாங்கம் எப்போதும் அரசு ஊழியர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

2019 ஆம் ஆண்டின் ஆரம்பம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நாங்கள் உலக மதிப்பீடுகளின் குறியீட்டில் கீழே செல்ல ஆரம்பித்தோம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா என அனைவரும் கேட்கின்றனர். அப்படி ஒரு நிலை இல்லை. ஆனால் இந்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க உங்கள் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. சுகாதாரம் குறித்து நோக்கினால் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை நாம் உரிய முறையில் மேற்கொண்டுள்ளோம். எங்களின் அடுத்த மூலோபாயம் நாட்டிற்கு எவ்வாறு முதலீட்டை கொண்டு வருவது என்பதாகும். நல்ல தடுப்பூசி திட்டங்களால் மூடப்படும் அபாயத்தில் இருந்த தொழிற்சாலைகள் அந்த உற்பத்தி நிலையங்கள் தொடர்ந்து இயக்கி வருகின்றன. டிஜிட்டல்மயமாக்கல், அத்துடன் அரச சேவையில் தொடர்ச்சியான பயிற்சி வழங்கலும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் மற்றும் அரச சேவையின் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது என பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க நாடு எதிர்கொள்ளும் தனிநபர் மற்றும் சமூகப் பொறுப்பை வலியுறுத்தி வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம அவர்கள் உரையாற்றினார்.

கொவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ந்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். உங்கள் கைகளை சரியாகக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

அவசியமில்லாத இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். சமூக இடைவெளியை பேணவும். முகக்கவசத்தை சரியாக அணியுங்கள் மற்றும் புகைப்பிடிப்பதைத் தவிர்க்குமாறு தெரிவித்த விசேட வைத்தியர் நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம அவர்கள் இந்த நிலைமையிலிருந்து முன்னோக்கிச் செல்லும் போது நேர்மறையாக சிந்திக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, பிரதமரின் மேலதிக செயலாளர்களான சட்டத்தரணி சமிந்த குலரத்ன, ஹர்ஷ விஜேவர்தன உள்ளிட்ட பிரதமர் அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button