இலங்கைசெய்திகள்

புதிய ஆவண நகல் இன்று தயாரானது!!

New document copy preparation

வடக்கு – கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தமிழ் பேசும் தரப்புக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை – பொதுவான அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் பொது ஆவணத்தைத் தயாரிக்கும் முயற்சியில் புதிய நகல் ஒன்று இன்றைய கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தரப்புக் கட்சித் தலைவர்களின் பரிசீலனைக்கு அது வழங்கப்பட்ட பின்னர் தீர்மானம் எடுக்கப்படும்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்திலுள்ள அவரது அலுவலகத்தில் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை புதிய நகல் ஆவணம் தயாரிக்கும் முயற்சியில் தலைவர்கள் ஈடுபட்டனர்.

இந்த முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர், புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி., ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ரெலோவின் பேச்சாளரும் இந்த முயற்சியின் இணைப்பாளருமான சுரேந்திரன் குருசாமி ஆகியோர் பங்குபற்றினர்.

புதிய ஆவண நகல் தயாரிப்புக்காக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. அனுப்பிவைத்த குறிப்பும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

  • இந்த ஆவணத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு அப்பாலும் செல்வோம் என 1987 முதல் இலங்கை – இந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிகள் நினைவூட்டப்பட்டுள்ளன.
  • 13ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டு, பின் கைவாங்கப்பட்ட, நடைமுறைப்படுத்தப்படாத அதிகாரப் பகிர்வு விடயங்களை நடைமுறைப்படுத்துவது இந்திய – இலங்கை அரசுகளின் கடப்பாடு என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • சமஷ்டி அடிப்படையிலான தீர்வே இறுதி இலக்காக அமைய வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் மூன் று பக்கங்களைக் கொண்ட இந்த நகல் ஆவணத்தின் பிரதிகள் அனைத்துத் தமிழர் தரப்புக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவர்களின் பிரதிபலிப்பை கவனத்தில் எடுத்து ஆவணம் இறுதி செய்யப்படும் எனத் தெரிகின்றது.

இன்றைய கூட்டத்துக்கு மனோ கணேசன் வராத நிலையில் இந்த ஆவணம் தொடர்பில் அவரின் அவதானிப்பு முக்கியமாக எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆவணத்தின் பிரதியைத் தம்முடன் எடுத்துச் சென்ற ரவூப் ஹக்கீம் எம்.பி., தமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுடன் விரிவாக உரையாடிய பின்னர் தமது பக்கக் கருத்துக்களைத் தெரிவிப்பார் எனவும் கூறப்பட்டது. செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button