(நமது விசேட செய்தியாளர்)
“மக்களின் ஆர்ப்பாட்டங்களை நான் மதிக்கின்றேன். ஆனால், நாட்டின் நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் போடும் ஆட்டங்களை நான் வெறுக்கின்றேன். அவர்கள் என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது.”
- இவ்வாறு முன்னாள் அமைச்சரான நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.
ஜனாதிபதியையும் அரசையும் வீட்டுக்குச் செல்லுமாறு கோரும் எதிர்க்கட்சியினரும், அவர்களின் ஆதரவாளர்களும் மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் ஏன் மௌனம் காக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சியினருக்குள் ஒற்றுமை இல்லை எனவும், அவர்கள் அரசுக்கு எதிராகப் பொங்குவதால் எவ்வித பயனும் ஏற்படாது எனவும் அவர் கூறினார்.
நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசால்தான் தீர்வு காணமுடியும் எனவும் நாமல் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரச கூட்டணியுடன் எதிர்க்கட்சிகளும் இணைந்து செயற்பட்டால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையளிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.