நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கும் நடைமுறைகள் எவை?
நம்பிக்கையில்லா பிரேரணை – குற்றப் பிரேரணைக்கு ஜே.வி.பி., கூட்டமைப்பு ஆதரவு , மதில் மேல் பூனையாக சுயாதீன அணிகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றப்பிரேரணையும் முன்வைக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (08.04.2022) அறிவிப்பு விடுத்தது.
இதன்படி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எம்.பிக்களின் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று (08) முதல் ஆரம்பமானது. அத்துடன், குற்றப்பிரேரணைக்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன.
மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், பதவியில் நீடிக்கும் ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றப்பிரேரணைக்கும், அரசை விரட்டுவதற்கான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் ஆதரவளிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அரசமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்படும் இவ்விரு நகர்வுகளுக்கும் ஆதரவு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிவி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் தேசியக் கூட்டணியும் ஆதரளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடுகள் இன்னும் உறுதியாக வெளியாகவில்லை. சுயாதீன அணிகளின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்காத பட்சத்தில் மேற்படி உறுப்பினர்களும் இவ்விரு நகர்வுகளுக்கும் ஆதரவாக செயற்படக்கூடும்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரமளவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு கையளிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் நகர்வுகள் எவை?
- அரசாங்கம், பிரதமர், அமைச்சரவை போன்றன நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறவேண்டும். அந்தவகையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கான காரணங்களை உள்ளடக்கிய பிரேரணை எம்.பிக்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.
அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ‘கட்டாயம் இத்தனை எம்.பிக்கள் கையொப்பம்’ இட்டாக வேண்டும் என்ற எண்ணிக்கை வரையறை இல்லை. - இவ்வாறு கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்டவலுவானதா என்பது தொடர்பில் சபாநாகரால், நாடாளுமன்ற செயலாளரிடம் விளக்கம் கோரப்படும்.
- மேற்படி பிரேரணையானது சட்டவலுவுடையது, நாடாளுமன்ற நிலையியற்கட்டளைக்கு உட்பட்டதென நாடாளுமன்ற செயலாளர் உறுதிப்படுத்திய பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறும்.
- குறித்த யோசனை நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்படும்.
- நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகம் எம்.பிக்களுக்கு பகிரப்படும்.
- அதன் பின்னர் 5 வேலை நாட்களுக்கு பிறகு விவாதம் நடத்தலாம். எனினும், விவாதம் நடத்துவதற்கான திகதியை சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவே தீர்மானிக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். முக்கியத்துவம்மிக்க விவகாரமாக கருதி அண்மித்த காலப்பகுதியை விவாதத்துக்குரிய நாளாக ஒதுக்குவது சம்பிரதாயம். ஆனால் ஆளுந்தரப்புக்கு தேவை ஏற்படும் பட்சத்தில் இழுத்தடிப்புகளையும் செய்யலாம்.
- விவாதத்துக்கான நாள் நிர்ணயிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்படும். குறித்தொகுக்கப்பட்ட நாளில் விவாதம் நடத்தப்படும். இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
- வாக்கெடுப்பில் கலந்துகொண்டும் உறுப்பினர்களில் பெரும்பான்மையே வெற்றியை நிர்ணயிக்கும். 113 என்பது கட்டாயம் இல்லை. சுமார் 100 எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றால் 51 பேர் ஆதரவாக வாக்களித்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்றதாக கருதப்படும். அடுத்தக்கட்ட நகர்வுகள் ஜனாதிபதி ஊடாக மேற்கொள்ளப்படும்.
நம்பிக்கையில்லாப் பிரேணைமீதான விவாதத்துக்கு முன்னர், அரசு பதவி விலகினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை வலுவிழந்துவிடும். ஜனாதிபதி நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தினால், மீண்டும் முன்வைக்க வேண்டிவரும்.
இலங்கை நாடாளுமன்றத்தில் முதலாவதாக டட்லி சேனாநாயக்க தலைமையிலான அரசுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதன் பின்னர் இற்றைவரை சுமார் 23 வரையான பிரேரணைகள் அரசுகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. இவற்றில் 2018 இல் முன்வைக்கப்பட்ட பிரேரணை மட்டுமே வெற்றிபெற்றது. ( 52 நாட்கள் அரசியல் சூழ்ச்சியின்போது)
அதுவும் ஒழுங்கு பத்திரம் உட்பட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை நிறுத்தவிட்டுதான், பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனாதிபதி நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தற்போதைய 9ஆவது நாடாளுமன்றத்தில் இறுதியாக வலுசக்தி அமைச்சராக இருந்த உதய கம்மன்பிலவுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது . வாக்கெடுப்பின்போது அதனை மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசு தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி – சனத்