இலங்கைசெய்திகள்

நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம் – காணாமல் போனோரின் உறவுகள்!!

missing persons reletives

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என்று காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

எமது உறவுகளின் உண்மைநிலையை வலியுறுத்தி மூன்று வருடங்களிற்கும் மேலாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எனினும் எமக்கான நீதியினை எந்த ஒரு அரசாங்கமும் வழங்கவில்லை. எமது உறவுகளை தருமாறே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்கவில்லை. எனவே எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடை நிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம்.

அத்துடன் முல்லைத்தீவில் ஊடகவியலாளரை இராணுவத்தினர் தாக்கியமை அநீதியான செயற்பாடு. மக்களின் பாதுகாப்புக்காகவே இராணுவம் நிலைகொண்டுள்ளதாக கூறி தமிழ் மக்களை பாதிக்கும் செயற்பாடுகளையே இந்த இராணுவம் முன்னெடுத்து வருகின்றது. எனவே அதனையும் வன்மையாக கண்டிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, நிதி வேண்டாம் நீதியே வேண்டும், ஓம்பியை திணிக்காதே, பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே, அரசின் பொறுப்பற்ற பதில்களை கண்டிக்கின்றோம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button