இலங்கைசெய்திகள்

இரண்டு மாதங்களுக்குள் தீர்வு – இல்லையேல் அரசுக்கு ஆபத்து – வலுசக்தி அமைச்சர் கம்மன்பில பகிரங்க எச்சரிக்கை!!

Minister of Power and Energy Kamanpila

“சமூக மட்டத்தில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் இரு மாதங்களுக்குள் தீர்வு காணாவிடின் அது அரசின் இருப்புக்கு ஆபத்து மிக்கதாக அமையும்.”

  • இவ்வாறு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வலுசக்தி துறை அமைச்சு இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை இடைநிறுத்தியுள்ளதால் நாடு தழுவிய ரீதியில் மின்விநியோகத்தைத் துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை குறிப்பிட்டதன் பின்னரே மின்னுற்பத்தித் துறையில் மின்சார சபை முன்னெடுக்காத பல விடயங்களை வலுசக்தி அமைச்சு பகிரங்கப்படுத்தியது.

தேசிய மின்விநியோகக் கட்டமைப்பில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் யோசனையை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவிடமும், மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொக்குகேவிடமும் வலுசக்தி அமைச்சர் என்ற ரீதியில் குறிப்பிட்டுள்ளேன்.

மின்விநியோகக் கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நீண்டகால கொள்கையை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

நெருக்கடியான நிலையின்போது மாத்திரம் தீர்வு காணும் திட்டங்களைச் செயற்படுத்துவதை மின்சார சபை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

சுபீட்சமான எதிர்கால கொள்கைக்கமைய அரசு செயற்படுகின்றதா என்பது சந்தேகத்துக்குரியது. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கல், யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் தீர்மானம் ஆகியன சுபீட்சமான கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பிடப்படவில்லை.

அரசு கொள்கைக்கு முரணாகச் செயற்படும்போது அதனைச் சுட்டிக்காட்டி அரசை நல்வழிப்படுத்தும் பொறுப்பு கூட்டணியில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கு உண்டு. சமூக மட்டத்தில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் இரு மாத காலத்துக்குள் தீர்வு காணாவிடின் அது அரசின் இருப்புக்கு ஆபத்துமிக்கமாக அமையும்” – என்றார்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button