“இலங்கை வங்குரோத்து நிலையை அடையும் என்ற எதிரணிகளின் விமர்சனங்களானவை வெறும் பகல் கனவாகும். அத்துடன், அந்நியச் செலாவணி கையிருப்பை அரசு உரிய வகையில் முகாமை செய்யும்.”
- இவ்வாறு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“நாட்டில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகளே காணப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று நிலைமையிலிருந்து மீளும் வரை இந்தப் பிரச்சினையையும் நாம் எதிர்கொண்டாக வேண்டும். இது பற்றி மக்களும் சிந்திக்க வேண்டும்.
பொருட்களின் விலை உயர்வென்பது அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பான விடயமாகும். எனவே, அது தொடர்பான முடிவை எவரும் விரும்பி எடுப்பதில்லை. விரும்பாவிட்டாலும் அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலை என்பதாலேயே விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிரணிகள் கூறுவதுபோல நாடு வங்குரோத்து நிலையை அடையாது. அது சஜித் , அநுர போன்றவர்களின் பகல் கனவாகும்” – என்றார்.
செய்தியாளர் சுடர்