“வாழ்வதற்கான உரிமையை நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள ராஜபக்சர்களின் பலமிக்க மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆட்சியை சஜித் தரப்பினரால் கவிழ்க்க முடியாது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க தெரிவித்தார்.
“நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையே இன்றைய பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை அனைவரும் மறந்துவிட்டனர்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்து நாம் இந்த நாட்டை சுமார் ஒன்றரை வருடங்கள் முடக்கியிருந்தோம்.
நாடு கொரோனாப் பெருந்தொற்றை எதிர்கொண்டிருந்தபோது, நாட்டு மக்களது வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தீர்மானம் எடுத்தார்.
இதன் காரணமாக வாழ்வாதார முறைமையை ஒரு மட்டத்துக்குக் கட்டுப்படுத்த நேர்ந்தது.
இதன் காரணமாகவே நாட்டை முடக்கி தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
தடுப்பூசி செலுத்தியதன் முதல் பலனை மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ளனர்.
இரண்டாவது தடவையாக வாழ்வதற்கான உரிமையை நாட்டு மக்களுக்கு ராஜபக்சர்கள் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
தடுப்பூசி நாட்டுக்கு வந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம் என்று கூறினார். தடுப்பூசி செலுத்திக்கொள்ளப் போவதில்லை என்றும் கூறினர். எனினும், அவர் திருட்டுத்தனமாகச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்” – என்றார்.