வருடா வருடம் குமுழமுனை இந்து இளைஞர் சங்கம், குமுழமுனையில் உள்ள அனைத்து வீரர்களையும் ஒன்றிணைத்து நடாத்துகின்ற குமுழமுனை பிரீமியர் லீக் (kumulamunai premier League) மென்பந்து துடுப்பாட்ட போட்டி இவ்வருடம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, குமுழம் என ஆறு அணிகளினை உள்ளடக்கி போட்டிகள் 08.01.2022 அன்று ஆரம்பமானது. இதில் இரண்டு சுற்றுக்களாக போட்டிகள் நடைபெற்று மருதம் மற்றும் குறிஞ்சி அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
நேற்று (17.01) ஐக்கிய விளையாட்டுக்கழக மைதானத்தில் 8 பந்து பரிமாற்றங்களை கொண்ட இறுதி போட்டியில் மருதம் மற்றும் குறிஞ்சி ஆகிய இரண்டு பலம் வாய்ந்த அணிகளும் பல பரீட்சை நடாத்தின. இதில் இரு அணிகளின் வீரர்களும் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடினார்கள்.
இறுதியாக மருதம் வெற்றி வாகை சூடியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மருதம் அணி முதலில் களத்தடுப்பினை தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய குறிஞ்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 8 பந்து பரிமாற்றத்தில் 69 ஓட்டங்களை பெற்றது. இதில் அதிக படியாக தினேஸ் 13 ஓட்டங்களையும் திவ்யன் 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் நேருஜன் 4 இலக்கினையும், சுதாலதன் 2 இலக்கினையும், அனோஜன் 1 இலக்கினையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மருதம் அணி 7.1 பந்து பரிமாற்றம் நிறைவில் 70 ஓட்டங்களை பெற்று இலக்கினை அடைந்தது. இதில் அதிகபடியாக சுதாலதன் 30 ஓட்டங்களையும், நேருஜன் 16 ஓட்டங்களையும், அனோஜன் 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் குமுதன், பவதாஸ், தினேஸ் ஆகியோர் தலா ஒரு இலக்கினை வீழ்த்தினர்.
குறித்த இறுதி போட்டியில் க.சுதாலதன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இறுதி போட்டியில் வெற்றி பெற்றதற்காக மருதம் அணிக்கு வெற்றி கேடயமும், முப்பதாயிரம் (30,000) பண பரிசும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தினை பெற்ற குறிஞ்சி அணிக்கு வெற்றிக்கேடயமும் இருபதாயிரம் ரூபா ( 20,000) பண பரிசும் வழங்கப்பட்டது.
இப் போட்டி தொடரில் குமுழம் அணியின் வீரர் சுஜீனோ அதிக ஓட்டங்களையும், அதிக இலக்கினையும் சாய்த்து அதற்கான விருதினை பெற்றார். வளர்ந்து வரும் வீரர்களுக்கான விருதினை தமிழ், பிறையாளன், சுடர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விளையாட்டுக்கு வயது தடையல்ல என நிரூபித்த திருநாதனுக்கு விருது வழங்கப்பட்டது.
மேலும் அணியின் உரிமையாளர்களுக்கும் இந்து இளைஞர் சங்கம் கௌரவம் வழங்கியது. இதில் முல்லை அணியின் உரிமையாளர் ச.கமலநாதன், மருதம் அணியின் உரிமையாளர் சு.சத்தி, பாலை அணியின் உரிமையாளர் ச.றஜனிகாந், நெய்தல் அணியின் உரிமையாளர் பா.மணிவண்ணன், குறிஞ்சி அணியின் உரிமையாளர் ப.பவதாஸ், குமுழம் அணியின் உரிமையாளர் சி.சுதர்சன் ஆகியோருக்கும் கௌரவம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் கிஷோரன்.