மன்னார் அடம்பன் பகுதியில் இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது . நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்லும் பொருட்களின் விலையேற்றம் மற்றும் ஸ்திரமற்ற அரசியல் நிலைவரம் என்பவற்றைக் கண்டித்து தற்போதைய அரசாங்கத்தினை அகற்றும் முகமாக காலிமுகத்திடலில் நடைபெறும் ‘கோட்டா கோ கோம்’ என்ற போராட்டத்திற்கு ஆதரவாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நெடுங்கண்டல் சந்தியில் ஆரம்பித்த இந்தப் போராட்டம் பிரதேச சபை அலுவலகம் வரை சென்று நிறைவடைந்துள்ளது. வர்த்தக சங்கம் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் சங்கம் இணைந்து இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
ஏற்பாட்டாளர்களுடன் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் எனப்பலதரப்பட்டவர்களும் இப்போராட்டத்தில் இணைந்து ஒட்டுமொத்த மக்களின் மன அபிலாஷைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
“கொலைகார அரசே”, “கொலையாளி கோத்தபாய”, “சொந்த மக்களையே சுட்டுத்தள்ளாதே” , “இரத்தவெறி பிடித்தவனே நாட்டைவிட்டு வெளியேறு” “தலைமைக்குத் தகுதியற்றவனே நாட்டைவிட்டு வெளியேறு”, “விவசாயத்தில் கைவைத்து நாட்டை அழிக்காதே” போன்ற பல பதாதைகளை இவர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் – மன்னாரிலிருந்து காந்தன்