‘ஜெய் பீம்’ படத்தில் ராஜகண்ணுவாக நடித்த நடிகர் மணிகண்டன் சில்லு கருப்பட்டி, ஏலே, நெற்றிக்கண் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
அவருடைய நடிப்புத் திறமை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றாலும், மணிகண்டன் ஒரு எழுத்தாளர் இயக்குனர், திறமைமிக்க பலகுரல் கலைஞர் என பல பரிமாணம் கொண்டுள்ளவர் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பீஸா2 வில்லா திரைப்படத்தில் வசன கர்த்தாவாக அறிமுகமான இவர், ‘விக்ரம் வேதா’ படத்தில் சிறு வேடத்தில் நடித்தது மட்டுமின்றி மாதவன் மற்றும் விஜய் சேதுபதிக்கு வசனமும் எழுதியுள்ளார்.
‘விஸ்வாசம்’, ‘தம்பி’ போன்ற படங்களிலும் பணியாற்றிய இவர், அண்மையில் வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்கு வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், மணிகண்டன் இயக்குநராக கால் பதிக்கும் முதல் படத்துக்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இதற்கு முன்பு 2015 இல் ‘நரை எழுதும் சுயசரிதம்’ என்ற சுயாதீன திரைப்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.
இப்படத்தில் மணிகண்டன் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியாகி அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒரு ஓய்வு பெற்ற நபருக்கும் வேலையில்லாத ஒருவருக்கும் இடையில் நகரும் கதையை கொண்ட இந்த சுயாதீன திரைப்படத்தை நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
‘நரை எழுத்தும் சுயசரிதம்’ திரைப்படம் பின்னர் இந்திய திரைப்படப் போட்டியின் கீழ் 2016 பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது.
2016 இல் நியூயோர்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நான்கு படங்களில் இதுவும் ஒன்றாகும்.