இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி அமுலாகும் வகையில் ஒரு வருடத்திற்கு இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன செயற்பட உள்ளாரென ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பிற்கு அமைய ஒரு வருட காலத்திற்கு இலங்கை தேசிய அணியின் தொழிற்பாட்டிற்கு முழு பொறுப்பாளராக மஹேல ஜயவர்தன செயற்படுவார்.
அத்துடன் வீரர்கள் மற்றும் நிர்வாக குழுக்களுக்கு பெறுமதியான மூலோபாய ஒத்துழைப்பினை அவர் வழங்குவார் என்றும் ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
இலங்கை அணி அடுத்த ஆண்டு சர்வதேச அட்டவணையின் பிரகாரம் அதிக அளவிலான போட்டிகளில் பங்குகொள்ள உள்ள நிலையில் மஹேல ஜயவர்தன உள்வாங்கப்பட்டமை தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இருபதுக்கு 20 தகுதிகாண் சுற்றில் இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல செயற்பட்டிருந்தார்.
அத்துடன் பிரபல ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும் அவர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.