நிரந்தரமாக்குமாறு கோரி உள்ளுராட்சி மன்றங்களில் கடமை புரியும் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்.
உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் பதிலீட்டு அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் தம்மை சேவையில் நிரந்தரமாக்குமாறு கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாலும் புதன்கிழமை காலை ஏக காலத்தில் இந்த கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஏறாவூர் நகர சபையின் முன்னால் முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டத்தில் அங்கு கடமை புரியும் சுமார் 66 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
180 நாள் பணி புரிந்தோருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் திட்டத்தில் எங்களையும் உள்வாங்கு, 8 வருடங்களாக நாங்கள் ஆகக் குறைந்த ஊதியத்தைத்தான் பெறுகின்றோம், ஊரை சுத்தப்படுத்தும் எங்களின் சேவைக்கு மதிப்பளி போன்ற வாசகங்கள் அடங்கிய கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊழியர்கள் கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர்.
தற்காலிக ஊழியர்களால் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ் நளிமிடம் கையளிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த நகர சபைத் தலைவர் இந்த ஊழியர்கள் மாதாந்தம் சுமார் பத்தாயிரம் ரூபாவுக்குக் குறைந்த தொகையையே ஊதியமாகப் பெறுகின்றனர். அதுவும் இவ்வூர் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதூன் இந்த மாதாந்தக் கொடுப்பனலைவ வழங்குகின்றோம்.
எனினும் அவர்கள் ஆற்றும் பணி அளப்பெரியது. அதனால் இதற்கு முன்னால் கோலோச்சிய நல்லாட்சி அரசு இவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அதேபோன்று இந்த அரசம் பாராமுகமாக இருந்து விடாமல் இந்த தற்காலிக ஊழியர்களை தமது தொழிலில் நிரந்தரமாக்க வேண்டும்” என்றார்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் பதிலீட்டு அடிப்படையில் சுமார் 940 ஊழியர்கள் நிரந்தர நியமனமின்றி சுமார் 8 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
வ.சக்திவேல்