பாணந்துறை தலைமை தபால் நிலையத்தில் விநியோகிக்கப்பட வேண்டிய ஒருதொகை முக்கிய கடிதங்களை பின்வத்தை, சாந்தி மாவத்தை கடற்கரையில் உள்ள முட்புதருக்கு அருகில் வைத்து பின்வத்தை காவல்துறையினர் இன்று (11) பிற்பகல் கண்டுபிடித்துள்ளனர்.
நகை அடமானம் தொடர்பான சீட்டுகள், பரீட்சைகள் மற்றும் வங்கி விவரங்கள் தொடர்பான அறிவித்தல்கள், குறிப்பிட்ட சில பற்றுச்சீட்டுகள் மற்றும் தனிப்பட்ட கடிதங்கள் உள்ளிட்ட 99 முக்கிய ஆவணங்களை காவல்துறையினர் இவ்வாறு கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கடிதங்களை முதலில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பார்வையிட்டுள்ளதாகவும், இதன் பின்னர் பின்வத்த காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து, காவல்துறையினர் புதரில் இருந்து கடிதங்களை மீட்டுள்ளனர்.
வேறு சில கடிதங்கள் உள்ளதா என அப்பகுதியில் தேடப்பட்ட நிலையில், பாணந்துறை தபால் நிலைய அதிகாரிகள் இருவர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து குறித்த கடிதங்கள் விரைவில் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் குறித்த கடிதங்களில் முக்கியமான கடிதங்கள் எதுவும் இல்லை என பாணந்துறை தபால் மா அதிபர் என்.ஜெயசிங்க தெரிவித்தார்.
சமீப நாட்களாக தபால்காரர்கள் இல்லாத காரணத்தால், தொழிலாளர்களை பயன்படுத்தி கடிதங்கள் விநியோகிக்கப்படுவதாகவும், அதனால் இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை கண்டறிவது கடினமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.