இலங்கைசெய்திகள்

மனதை கனக்க வைக்கும் ஒரு மடல் – செ. அன்புராசா!!

letter

அன்பின் நண்பா பியதாச,
உன் அன்பு நண்பன் அன்புராசா எழுதுவது!
எப்படிச் சுகமாக இருக்கின்றீர்களா? நாடே இருளிலும் பசி பட்டினியிலும் இருக்கும்போது நலமாய் இருக்கின்றீர்களா என்று கேட்பதற்குக் கொஞ்சம் கஸ்ரமாக இருக்கின்றது! இத்துன்பப் படலம் விரைவாய்க் கடந்துபோக இறைவன் துணைசெய்வாராக!
நிற்க, பியதாச, நீங்கள் கோல்பேசில் ஐந்தாவது நாளாக இன்றைய நாளிலும் நிற்பதாக அறிந்தேன்! புனித நாளான உங்கள் புத்தாண்டின் முதல்நாளில் இப்படியொரு நிலைமையை யாரும் கனவிலும் காணவில்லை! அங்கு, நிலைமைகள் எப்படி இருக்கின்றது?
பியதாச, என் உள்ளத்தில் எழுந்த சில எண்ணங்களை இத்தருணத்தில் உங்களோடு பகிர்வது எவ்வளவு பொருத்தமோ தெரியவில்லை! இருப்பினும் அதனை உங்களிடத்தில் சொல்லிவிடுவது நல்லதுபோல் எனக்குப் படுகின்றது! அதனால் எழுதுகின்றேன்.
சில தசாப்தங்களை இந்நேரத்தில் எண்ணிப் பார்க்கின்றேன்!…
நாங்கள் எங்கள் சொந்த வீடுகளிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் ஆண்டுக் கணக்கில் துரத்தப்பட்டு பல தடவைகள் இடம்பெயர்ந்து அழுதழுது அலைந்து திரிந்தோம்; அப்போது எங்கள் அழுகை உங்களுக்குக் கேட்கவும் இல்லை, ஏன் இந்நிலையென்று பின்னர் நீங்கள் கேட்கவும் இல்லை!
எங்கள் குழந்தை குட்டிகளோடு பல ஆண்டுகளாக உணவின்றிப் பசியுற்றுப் பட்டினி கிடந்தோம்; நீங்கள் பார்க்கவும் இல்லை, பரிதாபப்படவும் இல்லை!
குண்டுவீச்சிலும் எறிகணை வீச்சிலும் குற்றுயிராய் ஆக்கப்பட்டு, எங்கள் சகோதரிகள் கற்பழிக்கப்பட்டு, எங்கள் சகோதரர்கள் சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள்; நீங்கள் எங்களைக் காணவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை!
நாங்கள் கடத்தப்பட்டுச் சுடப்பட்டு வீதிகளில் வீசப்பட்டோம்; நீங்கள் அருகில்வரவும் இல்லை, அனுதாப்படவும் இல்லை!
எங்கள் விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டு இராணுவ விடுதிகள் அமைக்கப்பட்டன; நீங்கள் அதனைப்பற்றி அக்கறை காட்டவுமில்லை, அலட்டிக்கொள்ளவும் இல்லை!
நாங்கள் காணாமலாக்கப்பட்டுப் புதைக்கப்பட்டோம், அப்போதுகூட உங்கள் கவனம் எங்களில் படவே இல்லை!
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இழைக்கப்பட்ட, இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்காகவும் அட்டூழிங்களுக்காகவும் நீதிகேட்டு வீதியில் ஆயிரம் தடவைகள் நின்றிருப்போம்! எங்களின் மீது பிரயோகிக்கப்படும் அடாவடித்தனங்கள் பற்றியும் அத்துமீறல்கள் பற்றியும் உங்களின் எண்ணத்தில், மனத்தில், நடவடிக்கையில் எந்த மாற்றமும் என்றும் ஏற்பட்டதில்லை!இந்நிலைப்பாட்டினை இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெளிப்படுத்தி இருந்தீர்கள்!
இறுதியில், 2009ல் உலக நாடுகளின் சதியினால் எங்களில் ஆயிரமாயிரம் பேர்கள் கொல்லப்பட, இன்னும் பல ஆயிரமாயிரம் பேர்கள் குற்றுயிராய் கிடக்க, எஞ்சியோர் தடுப்புமுகாம்களில் அடைக்கப்பட்டபோது வீதியெங்கும் பட்டாசு கொழுத்தி, கிறிபத் கொடுத்து, விருந்துகள் அளித்து, ஆண்டுதோறும் பிரமாண்டமான வெற்றிவிழாக் கொண்டாடினீர்கள்! நாங்கள் வெட்கி நாணிக் கோணித் தலைகுனிந்து அம்மணமாய் நின்றோம், நிற்கின்றோம்!…
இன்று, நீங்கள் எரிபொருளும் மின்சாரமும் இல்லையென்று அழுகின்றீர்கள்! பால்மா இல்லையென்று பதறுகின்றீர்கள்! காஸ் இல்லையென்று புலம்புகின்றீர்கள்! அத்தியாவசிய பொருள்களின் அதீத விலையேற்றம் என்று கலங்கிப்போய் நிற்கின்றீர்கள்! இவை எதுவும் இல்லாமல்தான், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் வாழ்ந்துகொண்டும் எமக்கெதிரான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடியும் வந்தோம்! எங்கள் குழந்தைப் பருவம், எங்கள் சிறுபராயப் பருவம், எங்கள் இளமைப் பருவம் எல்லாமே இவ்வாறுதான் கழிந்தது! ஏனைய எங்கள் ஆயுட்காலமும் எங்கள் பிள்ளைகளின் பொற்காலமும் இவ்வாறுதான் கழிந்து கொண்டிருக்கின்றது!
பியதாச, உங்களுக்கு எரிபொருளும் மின்சாரமும் பால்மாவும் காஸ்சும் அத்தியாவசியப் பொருள்களும் கிடைத்துவிட்டால் உங்களின் பிரச்சினை தீர்ந்துவிடும்! எங்களின் பிரச்சினைகளுக்கான, எங்கள் அபிலாசைகளுக்கான தீர்வு!…
இருப்பினும், உங்களின் இத்துயர் மிகுந்த காலகட்டத்தில்,
நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்,
உடனிருக்கின்றோம்,
உங்களுக்கு உதவுவோம் என்பதை மட்டும்;
ஒருதடவை கூறிவைக்க விரும்புகின்றோம்!
நம்நாடு மீண்டும் நலம்பெறவேண்டும் என எல்லாம் வல்ல பரம்பொருளைப் பணிவோம்.
மிக்க நன்றி.
செ. அன்புராசா

Related Articles

Leave a Reply

Back to top button