கதைமுத்தமிழ் அரங்கம்.

நாட்டின் தலைவருக்கு ஒரு மடல்….

letter

ஐயா…இம்மடலை வரையவா,வேண்டாமா என்ற எனது பல நாட்களின் சிந்தனைக்குப் பிறகு இன்று எழுதியே விடுவது என்ற முழுத்தீர்மானத்தில் எழுத ஆரம்பித்து விட்டேன்.

ஐயா, நான் ஒரு பெண் தலைமைத்துவ குடும்பத்து தாய்…ஐந்து பிள்ளைகள்……யுத்தத்தின் இறுதிக் காலத்தில் ஊர் பார்க்கப்போன கணவன் வரவில்லை, சுடப்பட்டுவிட்டார் என அறிந்துகொண்டோம். அதன்பிறகு நாங்கள் பட்ட பாடுகளை வார்த்தைகளில் சொல்லிவிடவே முடியாது. ஒரு பெண்ணாக, ஐந்து பிள்ளைகளை வளர்ப்பதென்பது சாதாரண விடயம் அல்ல, 2009க்கு முன்னர் என்றால் வளர்த்துவிடலாம்.

தன்னிறைவான பொருளாதாரம் எங்களுக்கு இருந்தது. அறுபது வயது பாட்டிக்கும் ஏதோ ஒரு தொழில் இருந்தது. பெண்ணுக்கு பாதுகாப்பு நிறையவே இருந்தது, உள்ளதை சொல்லித்தானே ஆகவேண்டும். ஆனால் அதன் பின்னரான காலம்…..செத்துக் கொண்டே வாழ்ந்த அவலத்தை எப்படி ஐயா சொல்லமுடியும்?

சரி அதுதான் போகுது…ஏதோ காலம் இந்தளவிற்கு ஓடிவிட்டது, ஆனால் இப்போது இந்த நாட்டில் நடப்பவற்றை என்னவென்று சொல்ல, நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது முழு இலங்கையையும் சுபீட்சமான தேசமாக மாற்றுவீர்கள் என மக்கள் நம்பியிருந்தார்கள். அதாவது சிங்கள மக்கள். ஆனால் அந்த மக்களே இன்று பசிக்கும் பட்டினிக்கும் ஆட்பட்டு வீதிகளில் கோசமிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐயா, எத்துன்பம் வந்தபோதும் நாங்கள் தாங்கித்தான் ஆகவேண்டும். அது எங்கள் தலைவிதி. இங்கு நான் சொல்லவந்தவிடயத்தை விட்டுவிட்டு என்னவோ சொல்லிக்கொண்டிருக்கிறேன். “எய்தவன் இருக்க அம்பை நோவானேன்” என எங்களிடம் ஒரு பழமொழி உள்ளது.

கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திய எனக்கு இப்போது வேலையும் இல்லை. உரம் இன்மை, மூலப்பொருட்களின் விலையேற்றம், மின் வெட்டு எல்லாம் சேர்ந்து தொழிலைப் பறித்துவிட்டது.

அரைவயிறேனும் ஆக்கிக்கொடுப்பம் என்று நினைத்தால் அரிசி விலை அசுரவேகத்தில் போகிறது. ஏழை உணவு பருப்புதான்….அதற்கும் கூட இல்லாத நிலை, இரண்டு நாட்களாச்சு, வீட்டில் உணவுசமைத்து. “பசி வந்தால் பத்தும் பறந்துவிடும்” என்பர். ஆனால் அதன் பொருள் இப்படியும் ஆகுமென்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

பசிக்கொடுமையில் என் பிள்ளை பக்கத்து வீட்டில் காயவைத்திருந்த அரிசியில் களவாடி வந்துவிட்டான். அந்த அம்மா, கேட்கின்ற கேள்விகளுக்கு என்னால் பதிலேதும் சொல்லமுடியவில்லை…

“ஏனடா திருடினாய்?….” என பிள்ளையிடம் கேட்டால் …”பசிக்கிறது அம்மா” என்கிறான்…..

இன்னும் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை…பசிக்கொடுமையில் திருடிய ஒரு பாலகனுக்கு தண்டனை வழங்குவது எந்த விதத்தில் சரியாகும்? நீதியை உங்களிடமே கேட்டுவிடவேண்டும் என்றுதான் இந்த மடலை வரைகிறேன்.

நினைவுகூர்தல் தவறென்றீர்கள்,…. ஒரே நாடு ஒரே சட்டம் என்றீர்கள்…எழுத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்து என்றீர்கள்……தூபிகளை இடித்தீர்கள்…..எல்லாம் போக…கடைசியாக ஏழை வயிறுகளில் அடித்துவிட்டீர்களே….இது என்ன நியாயம்?

ஐயா, ஒருநேரமேனும் நீங்கள் பசிக்க வாழ்ந்ததுண்டா, அதன் வலியென்ன என உங்களுக்குத் தெரியுமா, பெற்ற பிள்ளைகள் பட்டினியில் சுருண்டு கிடந்தால் தாய் வயிறு எப்படி கொதிக்கும் என்பதை என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? ஏ.சி அறைகளில் வாழும் செல்வந்தர்களுக்கு உணவுக்கு கையேந்தும் அவலம் புரிவதில்லை…..

கெத்தாக ஆட்சி பீடம் ஏறிய நீங்கள், கொத்தாக மக்களை பட்டினியில் தள்ளிவிட்டு, வேடிக்கை பார்க்கின்றீர்களே? ஐயா நான் கிராமத்து பெண், மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவேன்.

எங்கள் நிலையைச் சொல்லிவிட இந்த மடலை எழுதியுள்ளேன். விரைவில் எங்களுக்கு தீர்வு தாருங்கள்….இல்லையேல் அயல்நாடு செல்வதும் திருட்டும் கொலையும் உச்சத்திற்குச் சென்றுவிடும்…..

இப்படிக்கு
இலங்கையின் பிரஜை

Related Articles

Leave a Reply

Back to top button