நில அபகரிப்புக்கு எதிராகக் கொக்கிளாயில் போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்படட கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான கிராமங்களில் 12 கிலோமீற்றர் நீளமான கடற்கரையுடன் இணைந்த கிராம மக்களின் சுமார் ஆயிரம் ஏக்கர் பூர்வீக நிலங்கள் கனிய மணல் அகழ்வு என்ற பெயரில் அபகரிக்கும் நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்களாலும், இராணுவ ஆக்கிரமிப்பாலும், மகாவலி எல் வலயத்தாலும், வன ஜீவராசிகள் திணைக்களம், வளவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்ற அரச இயந்திரங்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பாலும் இருப்புக் கேள்விக்குள்ளாகி வரும் தமிழ் மக்களின் எல்லைக் கிராமங்களில் மேலதிகமாக கனிய மணல் கூட்டுத்தாபனத்துக்கு என மிகுதி நிலங்களையும் அபகரிக்கும் வேலையை அரசு மிகத் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது.
எனவே, தமிழ் மக்களுக்குச் சொந்தமான இந்த நிலங்களை அபகரிப்பதைக் கண்டித்தும், அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் கொக்கிளாய் கிராம மக்களால் இன்று காலை 9.30 மணிக்கு கொக்கிளாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை முன்பாக இருந்து ஆரம்பமான போரணி கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் மக்களின் 44 ஏக்கர் காணியை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட் இன் கொக்கிளாய் பொறித்தொகுதிக்கு முன்பாக நிறைவடைந்தது
வளங்களை சுரண்டிவிட்டு எங்கள் நிலங்களை அழிக்கவா இந்த நாடகம், நிலமிழந்து போனால் பலமிழந்து போவோம், எமது நிலம் எமது உரிமை போன்ற பதாதைகளைத் தாங்கியவாறும், எமது நிலம் எமக்கு வேண்டும், அழிக்காதே அழிக்காதே தமிழர்களை அழிக்காதே, கொக்கிளாய் எமது பூமி, பறிக்காதே பறிக்காதே தமிழர்களின் நிலங்களைப் பறிக்காதே, அந்நியனே வெளியேறு உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் இடம்பெற்றது
கொக்கிளாய் கிராம மக்கள் முன்னெடுத்த குறித்த போராட்டத்தில் மக்களுடன் இணைந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரேழுச்சி இயக்க இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்
குறித்த போராட்டம் இடம்பெற்ற பகுதியில் சிவில் உடையில் வந்த பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் மக்களைப் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.