உலக சுகாதார ஸ்தாபனம், தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொவிட் வைரஸ் திரிபுக்கு ஒமிக்ரோன் ‘omicron’ என பெயரிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வைரஸ் திரிபு கரிசனைக்குரியது என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திரிபு அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளைப் கொண்டதெனவும் முதற்கட்ட ஆதாரங்களின் அப்படையில்இ இது மறுதொற்று அபாயமிக்கதாகும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி முதன் முதலாக இந்த வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.
அத்துடன் பொத்ஸ்வானா, பெல்ஜியம், ஹொங்கொங் மற்றும் இஸ்ரேல் முதலான நாடுகளிலும் இந்தத் திரிபு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்னாபிரிக்காவுக்கான பயணத் தடையை அல்லது கட்டுப்பாட்டை விதிக்க சில நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
பீ.1.1.529 என இந்த வைரஸ் திரிபு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் கண்டறியப்பட்ட வைரஸ்களை விடவும் இந்தத் திரிபு வீரியம் மிக்கதாக கூறப்படுகின்றது.
புதிய வைரஸ் திரிபில்இ 50 இற்கும் அதிகமான பிறழ்வுகள் உள்ளதாக தென்னாபிரிக்க தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர் டுலியோ டி ஒலிவேரா (Tulio de Oliveira) தெரிவித்துள்ளார்.
அவற்றில் 30 பிறழ்வுகள் தடுப்பூசி ஏற்றம் மூலம் கொவிட் தொற்றைத் தடுக்கும் வைரஸின் புரதக் கூறுகளை இலக்கு வைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா கொரோனா வைரஸ் திரிபை விடவும் இரு மடங்கு விகாரம்கொண்ட இந்தப் புதிய திரிபு தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்த்து வேகமாக பரவக்கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.