கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்து வறுமையில் உழன்று வருகின்றனர். அப்படியொரு சூழலில் செய்துகொண்டிருநத வேலையை இழந்து வறுமையில் வாடிய ஒரு இளைஞன் தனது ஸ்மார்ட் போனை வைத்து உலகப் பிரபலமாகி இருக்கிறார். அவர்தான் Khaby Lame.
ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பலரும் ஒருமுறையாவது இந்த கேபி லேம் டிக்டாக் வீடியோவை பார்த்திருக்கக் கூடும். விசித்திரம் மற்றும் திறமையை விரும்பும் பல யூடியூப் கிரியேட்டர்களுக்கு மத்தியில் தனது நகைச்சுவை மற்றும் எள்ளலான ரியாக்ஷன்களை வைத்தே கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார் இந்த கேபி லேம். அதுவும் எந்த மொழியும் இல்லாமல் வெறும் பாவனையில் செய்வதுதான் இவருடைய தனித்திறமையாக இருக்கிறது.
இத்தாலியில் பிரபல சிஎன்சி மெஷின் ஆப்ட்ரேட்டராக வேலைப்பார்த்துவந்த இந்த கேபி லேமிற்கு எல்லோரையும் போல கொரோனா நேரத்தில் வேலை இல்லாமல் போகிறது. இதனால் வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய இந்த 21 வயது இளைஞன் கேபி லேம் தன்னுடைய ஸ்மார்ட் போனை வைத்து டிக்டாக்கில் வீடியோவை உருவாக்குகிறார். இதற்காக மற்ற வீடியோ கிரியேட்டர்களைப் போல அவர் எந்த மெனக்கெடலையும் செய்யவில்லை.
மாறாக டிப்ஸ் என்ற பெயரில் ஏற்கனவே யூடியூபர்கள் அள்ளித் தெளித்திருக்கும் வீடியோக்களை எதற்கு இந்த மெனக்கெடல் என்று தனக்கே உரிய பாவனையில் கேள்வி கேட்கிறார். இந்த வீடியோக்கள் பார்ப்பவர்களுக்கு கிண்டலாக மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது.
இப்படித்தான் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சாதாரண விஷயங்களுக்கு ஏன் இவ்வளவு சிந்திக்க வேண்டும்? ஏன் மெனக்கெட வேண்டும் என்று கேள்வி கேட்கும் தோரணையில் தனது உடல் மொழியை வெளிப்படுத்தியே இன்று உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கிறார் கேபி லேம். இதனால் ஒரே வருடத்தில் 125.4 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளார். மேலும் இவருடைய வருமானம் 2 மில்லியன் அளவிற்கு உயர்ந்துள்ளது.
தற்போது கேபி லேம் பிரபலமாக இருந்தாலும் இவருடைய சிறுவயது வாழ்க்கை கோரமாக்கத்தான் இருந்திருக்கிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகலில் கடந்த 9 மார்ச் 2000 இல் பிறந்த கேபி லேம் தனது சிறு வயதிலேயே பெற்றோருடன் இத்தாலிக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்குள்ள சிவாசோ பகுதியில் வசித்துவரும் இவர் ஒரு அகதியைப் போலவே பாஸ்போர்ட் கூட இல்லாமல் பொதுக்குடியிருப்பில் வசித்துவந்திருக்கிறார். மேலும் அதே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த கேபி லேம் பிரபல CNC இயந்திரத்தை இயக்கும் வேலையைச் செய்துவந்துள்ளார்.
கொரோனா நேரத்தில் தனது வேலையை இழந்த இவர் தற்போது டிக்டாக் மூலம் உலகப் பிரபலமாகி இருக்கிறார். டிக்டாக்கில் அமெரிக்கா பாடகி ஜியான்லூகா உச்சிக்குப் பிறகு இவருடைய ஃபாலோயர்கள்தான் அதிகம். டிக்டாக்கைத் தவிர யூடியூப், இன்ஸ்டாகிராம் என மற்ற சமூக ஊடகங்களில் இவருக்கு ஏராளமான ஃபாலோயர்கள் இருந்துவருகின்றனர். இதனால் ஒரே வருடத்தில் கோடிஸ்வரராக மாறிவிட்ட இவர் இன்றைக்கும் சோகத்துடன் வலம்வருவதுதான் பலரையும் வருத்தப்பட வைக்கிறது.
காரணம் இத்தாலி சிவாசோ பகுதியில் வசித்துவரும் கேபி லேமிற்கு செனகல் நாட்டின் பாஸ்போட் இருக்கிறதே தவிர இத்தாலியில் வசிப்பதற்கான எந்த உரிமையும் இல்லாமல் தவித்து வருகிறார். இதனால் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தும் தன்னுடைய அம்மாவிற்கு ஒரு வீடு கட்டித்தர முடியவில்லையே, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று பணியாற்ற முடியவில்லையே என வருந்துவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
இவருடைய சோகமான கதையைக் கேட்ட பல முன்னணி நிறுவனங்கள் கேபி லேமிற்கு வேலைக்கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் மக்களை சிரிக்க வைப்பதே என்னுடைய தலையாய பணி என்று முடிவெடுத்த இவர் தொடர்ந்து டிக்டாக் வீடியோவில் தினம்தோறும் கோடிக்கணக்கான மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறார். கொரோனா, லாக்டவுன், வறுமை எனப் பல்வேறு சூழல்களில் சிக்கி தவித்துவரும் ஏராளமான மனிதர்களுக்கு கேபி லேமின் இந்த பின்னணி ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.