“போர்க்காலத்தில் குண்டுகள் வெடிக்கும் என்று வெளியில் செல்வதற்கு அச்சமடைந்ததைப் போன்று, இப்போது வீட்டுக்குள் எப்போது எரிவாயு சிலிண்டர் வெடிக்குமோ என்று அச்சத்துடன் மக்கள் வாழ வேண்டியேற்பட்டுள்ளது.”
- இவ்வாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடு மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு இந்த அரசால் தள்ளப்பட்டுள்ளது. போர் நிலவிய காலத்தில்கூட இந்தளவுக்கு வாழ முடியாத நிலைமைக்கு மக்கள் முகம்கொடுக்கவில்லை.
போர்க்காலத்தில் வீதிகளிலும், பஸ்கள் மற்றும் ரயில்களிலும் பயணிப்பதற்கு மக்களுக்கு எங்கே குண்டு வெடிக்குமோ என்று அச்சம் இருந்தது. அதேபோன்று இப்போது வீடுகளில் இருப்பதற்கும் அச்சமாக இருக்கின்றது. எப்போது எரிவாயு வெடிக்குமோ என்ற அச்சம் காணப்படுகின்றது. சமையல் எரிவாயு விலையைப் பாரியளவில் அதிகரித்து எரிவாயு குண்டையும் மக்கள் பக்கத்தில் அரச தரப்பினர் வீசியுள்ளனர்.
இதேவேளை, சகல பொருட்களின் விலைகள் தொடர்பாக கறுப்புச் சந்தை வியாபாரிகளுக்குத் தீர்மானம் எடுக்க அனுமதியளித்துவிட்டு தினசரி விலைகளைப் பாரியளவில் அதிகரிக்கின்றனர். இந்த அரசு வந்த நாள் முதல் மக்களின் சமையல் அறைகளின் மீதே தாக்குதல் நடத்தியது. சம்பளத்தையும் வருமான வழிகளையும் தவிர மற்றைய அனைத்தினதும் விலைகளை அதிகரித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டில் 1,493 ரூபாவுக்குப் பெற்ற சமையல் எரிவாயு இப்போது 2 ஆயிரத்து 675 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிவாயு எந்த நேரத்தில் வெடிக்குமோ என்ற பயத்தில் இருக்க வேண்டியுள்ளது. போர்க் காலத்தில் வீடு திரும்பும் வரையில் வீதிகளில் ஏதாவது வெடிக்குமோ என்ற நிலைமை இருந்தது. இப்போத வீட்டுக்குள் வெடித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒன்று எரிவாயு சிலிண்டனை வெளியில் வைக்க வேண்டும் இல்லாவிட்டால் வீட்டார் வெளியில் இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையின் பாரதூரத் தன்மையை சிறிதாக எடுக்க வேண்டாம் என்று கேட்கின்றோம்.
எரிவாயு சிலிண்டர்களின் பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்கின்றோம்” – என்றார்.