நீதி அவனுக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்தது…..
அறம் அவனுக்கு , ஒரு அபலைக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொடுத்தது….
வழக்கறிஞர் சுமதி சந்தித்த வழக்கு (நிஜ சம்பவம்) எமது மனசாட்சியை யும் தட்டுகிறது உறவுகளே….!
ஒரு இளைஞன் என்னிடம் வந்து என் வழக்கிற்கு நீங்கள்தான் ஆஜராக வேண்டும் மேடம் என்றான்.
நான் குழப்பமடைந்தேன் . ஏனென்றால் அது ஒரு “பாலியல் வன்முறை” வழக்கு.
நான் என்னால் ஆஜராக முடியாது. ஒரு மனசாட்சி இல்லாமல் இதில் எப்படி வாதாட முடியும் என்றேன்.
ஆனால் அந்த இளைஞனோ அடித்துச் சொல்கிறான் தான் தப்புப் பண்ணவில்லை என்று.
அந்தப் பாலியல் குற்றச்சாட்டில் அகப்பட்ட பெண்ணுக்கு வயது14
அந்த இளைஞன் அடுக்கடுக்காய் சம்பவங்களை எனக்குச் சொல்கிறான். நான் நிரபராதி என்று நம்புபவர் மட்டும்தான் என் வழக்கை நடாத்தவேண்டும். அதனால்தான் உங்களிடம் வந்துள்ளேன் மேடம் என்றான்.
அவன் சொன்ன முழுக் கதையையும் கேட்டு எனக்கு தெளிவாயிடுச்சு. அவனுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் தொடர்பு இருந்துள்ளது. அவன் அந்த வீட்டிற்குப் போய் வந்துள்ளான். அதை வைத்து பழியை அவன் மீது போடுகிறார்கள். அதனால் அந்த வழக்கை எடுத்து நடத்தினேன்.
மகளிர் நீதிமன்றில் வழக்கு நடக்கிறது.
நீதிபதிக்கு என்னைப் பார்த்தாலே கடுப்பாகிறது. ஏனென்றால் நீதிமன்றங்களைப் பொறுத்த மட்டில் யாருமே தான் குற்றவாளி என்று சொல்லுவதில்லை.
அந்தப் பெண் கையில் ஒரு வயது குழந்தை ஒன்றை வைத்திருக்கிறாள்
இப்படி ஒரு பெண் பரிதாபமாய் நிற்கிறாள். அப்படி ஒருவன் தைரியமாய் நிற்கிறான்.
நீ என்ன தைரியத்தில் இந்த வழக்கிற்கு ஆஜராகிறாய்….!!
என்ற கோபம் என்மீது நீதிபதிக்கு
வழக்கு தொடங்கி விசாரணை முடிந்தது. இருதரப்பிலும் வாதங்கள் நடக்கிறது.
நான் தெள்ளத்தெளிவாக அவன் குற்றவாளி இல்லை என்பதை நிறுபித்து விட்டேன்.
மிக எரிச்சலுடன் வேறுவழி இன்றி நிரபராதி என தீர்ப்புக் கொடுத்தார் நீதிபதி.
தீர்ப்பு கொடுத்த அன்று அந்தப் பெண் நீதிமன்று வருகிறாள்.
நானும் அந்த இளைஞனும் வெளியே வருகிறோம்.
ஒரு நிமி நில்லுங்க மேடம் என்று கூறி விட்டு, அந்த இளைஞன் அந்தப் பெண்ணை…….
ஒரு நிமி இங்கு வா எனக் கூப்பிட்டான்.
*எனக்கு இந்த வழக்கில் இருந்துதான் விடுதலை எதிர்பார்த்தேன். உனக்கே தெரியும்
நான் உன்னைக் கெடுக்கவில்லை என்று என்னிடம் ஒரேயொருமுறை உண்மையை சொல்லு* என்று கேட்டான்.
அந்தப் பெண் தலையை குனிந்தபடி சொன்னாள்..* இல்லை நீ செய்யல*
அவன் உடனே சொன்னான்……
இது போதும் எனக்கு…… இது போதும் எனக்கு…. எனக்கு தீர்ப்பு முக்கியம் இல்லை. உன் வாக்குத்தான் முக்கியம்.
நான் அடிக்கடி யோசிப்பேன்….. நீ ஏன் எனக்கு எதிராக கேஸ் குடுத்தாய் என்று….!
ஆம் யாரோ ஒருத்தன் உன்னை ஏமாற்றி விட்டு குழந்தையை கொடுத்து விட்டுப் போயிட்டான். ஆனால் இந்தக் குழந்தைக்கு நான்தான் ஒரு நல்ல தகப்பனாய் இருப்பேன் என்று உன் மனசில தோன்றிடிச்சில்ல….! என் மேல நம்பிக்கை வைச்சியில்ல…! அது போதும் எனக்கு. நான் உன்னை மணந்து கொள்கிறேன். இந்தக் குழந்தைக்கு அப்பா ஆகிறேன் என்றான்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல் அத்தனை நாளும் வேதனைகளைத் தாங்கி நின்ற அவன்…..
இன்னா செய்தாரை ஒறுத்தல்…. அவர் நாண நல்நயம் செய்து விடல் என்ற குறளுக்கு இணங்க யாரையும் சட்டை செய்யாமல், யாருடைய கேலிக்கும் பயப்படாமல் தன் மனம் சொன்ன அறத்தை துணிவாகச் செய்தான்
வாழ்வின் புரிதல்கள் எங்கே இருக்கிறது உறவுகளே….!
நீதியை ஒருநாள் படித்துவிட்டு…..
அறம் என்பதை ஒருநாள் வாசித்துவிட்டு……
அதை மறந்து விட்டுப் போவதுதான் வாழ்வா….?
தினம் தினம் எமது வாழ்வில் பயிற்சியில் இருக்கவேண்டியது அல்லவா…..!!
அருந்ததி குணசீலன்.