ஆசியாக் கண்டத்தில் அபிவிருத்தியடைந்த நாடாக விளங்குவது ஜப்பான் நாடு. இது கொக்கைடோ, கொன்சு,
சிக்கோக்கு, கியூசு என நான்கு பிரதான தீவுகளைக் கொண்டது. பன்னிரண்டுகோடி சனத்தொகைகொண்ட நாடாகும்.
உலக சனத்தொகையில் முதல் பத்து இடங்களை பெறும் நாடுகளில் ஜப்பானும் அடக்கம்.
டோக்கியோவைத் தலைநகராகக்கொண்ட இந்நாட்டில் பௌத்தம், சிந்தொயிஸ்ற் என இருமதங்கள்
காணப்படுகின்றன. இங்கு ஜபபானிய மொழியே பிரதான மொழியாக உள்ளது.
இந்நாட்டின் தலைநகர் பிரதான வர்த்தகமையமாக விளங்குகின்றது. வாழ்க்கைச்செலவு கூடிய நகராகவும்
விளங்குகின்றது. வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் தாராளமாகக் காணப்படுகின்றன. வேலைக்குச் செல்வோர்
அதிகமாகப் புகைவண்டியிலேயே பயணிக்கின்றனர். இந்நாட்டு மக்கள் பெரும்பாலும் கடும் நிறங்களை விரும்பி
அணிபவர்கள் அல்லர். இங்கு 14 வீதமானோர் விவசாயம் செய்பவர்கள். ஜப்பானில் 10 பேரில் ஒருவர்
வெளிநாட்டவரைத் திருமணம் செய்கின்றனர்.
4 வீதமான மக்களே வேலையற்றவர்களாகக் காணப்படுகின்றனர். ஏனையோர் இளையோர் முதல் முதியோர் வரை
அனைவரும் வயது வேறுபாடின்றி வேலை செய்கின்றனர். இந்நாடு வாகன ஏற்றுமதி மூலமும் சுற்றுலா பயணிகள்
மூலமும் அதிகளவான வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்றது.
டோக்கியோ ரவர், கெகொன் நீர்வீழ்ச்சி, ஜப்பானில் மிகஉயரமான அழகான பியூஜி மலை, நாரா பாக்,
இம்பீரியல்பலஸ், நிசுபாசி பாலம், சென்சோஜி கோயில், கப்பல் பயணம், பொருட்காட்சியகம், ரொடாஜி பௌத்த
ஆலயம், கடல் படுக்கையில் அமைந்துள்ள கான்சாய் விமான நிலையம் என ஜப்பானில் பார்த்து மகிழக்கூடிய
இடங்கள் அதிகம் உள்ளன.
இரண்டாம் உலகமகா யுத்தத்தில் அணுகுண்டால் அழிக்கப்பட்ட அதிக இழப்புகளைக் கண்ட ஜப்பான் நாடு,
பிரமிக்கும் வகையில் மீளமுன்னேற்றம் கண்டுள்ளது. இம்மக்கள் மனிதப்பண்பு, மனித விழுமியம், மனித நேயம்
மிக்கவர்களாக காணப்படுகின்றனர். இந்நாட்டுமக்களின் முயற்சி, தளராத தன்னம்பிக்கை, தேவையறிந்த
தூரநோக்கு, உன்னத இலட்சியம், நாட்டுப்பற்று, நேரமுகாமைத்துவம், சிறந்த உணவுப்பழக்கம், சிக்கனத்தன்மை,
எதிலும் தரத்தினைப் பேணுதல், அன்பும் பண்புமாகப் பழகும் தன்மை, மதிப்பளிக்கும் பாங்கு, உணர்வுபூர்வமான
பக்தி ஆகிய பண்புகள் போற்றத்தக்கவை.
ஒருவருடைய பண்பாட்டுக்கோலங்களே அவரது தன்மையை மதிப்பீடு செய்யும் வெளிப்படையான ஆதாரங்கள்
என்னும் உண்மையை ஜப்பானிய மக்களிடம் காணலாம். தேவையற்று வாயைத்திறவாதீர்கள் என்பதைப்
பின்பற்றும் இவர்கள், நேர அட்டவணைப்படி ஒழுங்குப் பரிமாணங்களைக் கடைப்பிடிப்பவர்கள். 5s இவர்களின்
வெற்றியின் அடிப்படையானதாகும்.
“விஞ்ஞானத்தின் சுவர்க்கம்” என வர்ணிக்கப்படும் இந்நாடு, ஆடம்பரமற்ற, அமைதியான, தன்னைப் பெரிதாக
அலட்டிக்கொள்ளாத ஒரு நாடாக உள்ளது. சமையலறை முதல் மலசலகூடம் வரை ஓர் ஒழுங்குப் படிமுறை
இங்குள்ளது. இம்மக்கள், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் வந்தபோதும் தாம் எதற்கும்
சளைத்தவர்கள் என்பதை நிரூபிக்கின்றனர். ஜப்பான் ஒருபோதும் தோற்றதாக வரலாறு இல்லை.
நம்பிக்கை என்பது ஏழாம் அறிவு, நம்பிக்கை இருந்தால் எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையை வெல்லலாம் என்பதில்
நம்பிக்கை உள்ளவர்கள் ஜப்பானியர்கள். “என்னால் முடியும்,” “நான் சாதிப்பேன்” என்ற தன்னம்பிக்கையை
மனங்களில் விதைப்பவர்கள். ஜப்பானியர்கள், பொதுவாக ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு 5 நிமிடத்திற்கு
முன்னர், நம்பிக்கை தரக்கூடிய உணர்வுகளை, தமக்குள் ஏற்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள். இதுவே இவர்களது
முன்னேற்றத்தின் முதுகெலும்பாகும்.
இந்நாட்டில் 25 வீத முதியவர்கள் (65 வயதிற்கு மேற்பட்டவர்கள்) உள்ளனர். ஜப்பானிய இளையோர்
முதியவர்களைப் பராமரிக்க, அவர்களின் கருத்துக்களைச் செவிமடுக்க, அவர்களுடன் நேரம் செலவழிக்க தயாராக
இல்லை என்பதனால் முதியோரைப் பராமரிப்பதற்கான ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஜப்பானில்
எந்தப்பிரச்சினை என்றாலும் தொழிநுட்பத்தின் மூலமே தீர்வுகாண்கின்றனர்.
நான் இவை அனைத்தும் ஜப்பானில் நேரிடையாகக் கண்டவை. எமது நாட்டு மக்களும் ஜப்பானிய மக்களிடம்
இருந்து பின்பற்றக்கூடியவற்றைப் பின்பற்றினால் எமது நாடும் முன்னேற்றம் காணும். எதையும் மேலோட்டமாகப்
பார்க்காமல் உணர்வுபூர்வமாக உள்வாங்கினால் வெற்றிகள் கிட்டும். எந்த இடமாக இருந்தாலும் சுத்தமாகவும்
அழகாகவும் இருக்கவேண்டும் என்பது அவசியம். பெற்றோரே, பிள்ளைகளை வளர்க்காதீர்கள், வளரவிடுங்கள்.
இயற்கையை நேசிக்கவும் மனிதநேயத்தை அறியவும் கற்றுக்கொடுங்கள். நாமும் பெருமையோடு வாழலாம்.
சி. நற்குணலிங்கம்
நெல்லியடி.