இலங்கைசெய்திகள்

யாழ். மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றது எனவும், இது ஆரோக்கியமானது அல்ல எனவும் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது. ஜனவரி மாத முற்பகுதியில் இருந்து கொரோனா பரவல் அதிகரித்துச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது.

இந்த அதிகரிப்பு ஆரோக்கியமானதாக இல்லை. தற்போது அனைத்துச் செயற்பாடுகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக போக்குவரத்து, கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாத் தொற்றின் நிலை மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளது எனச் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஆகவே, சுகாதார அமைச்சால் இறுதியாக வெளியிடப்பட்ட சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக பொதுமக்கள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் ஒன்றுகூடல்‌களைப் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக தேவையற்ற பயணங்கள், நடமாட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். தற்போதைய நிலையில் தடுப்பூசி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 62 வீதத்துக்கு மேற்பட்டோர் முதலாம் கட்டத் தடுப்பூசியையும், அதற்குக் குறைவானவர்கள் இரண்டாம் கட்டத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்கள் சற்றுக் குறைவாக இருந்தபோதும் தற்போது மக்கள் ஆர்வம் காட்டி இந்தத் தடுப்பூசியைப் பெற்று வருவது அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

ஆகவே, இந்தத் தடுப்பூசியை முறையாகப் பெற்றுக்கொள்வது சுகாதாரப் பகுதியினரால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனவே, பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்பாது தடுப்பூசிகளைத் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் டெங்கு காய்ச்சலும் அதிகமாகக் காணப்படுகின்றது. புள்ளிவிபரத்தின்படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாகக் காணப்படுகின்றது. எனவே, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மேலும், இங்கு மலோரியா அபாயம் இருந்தபோதும் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button