ஊர்காவற்துறையில் காணி சுவீகரிப்பு தடுப்பு நடவடிக்கையின் போது விசேட அதிரடிப் படையினரால் பொது மக்களுக்கு அச்சுறுதல் விடுக்கப்பட்டுள்ளது.
தீவகம் வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஊர்காவற்துறை கரம்பொன் மேற்கு பகுதியில் சிறீலங்கா கடற்படை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை அபரிப்பதற்கு நில அளவை திணைக்களத்தினர் முயன்றபோதிலும் அந்தப்பகுதி மக்களின் அணிதிரள்வின் காரணமாக தற்காலிகமாக காணி சுவீகரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது .
கரம்பொன் மெலிஞ்சிமுனை கடற்தொழில் சங்க தலைவரும் , தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை மூலக்கிளை செயலாளருமான மடுத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ) அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி எதிர்ப்பு போராட்டத்தில் மெலிஞ்சிமுனை கத்தோலிக்க தேவாலய பங்குத்தந்தை ML தயாபரன் , தமிழ் அரசுக்கட்சியின் வாலிப முன்னணி யாழ் மாவட்ட செயலாளர் கருணாகரன் குணாளன் , ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் கே. ஞானேஸ்வரன் மற்றும் பெருமளவான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர் . யாழ் பண்ணை முகாமைச் சேர்ந்த விசேட அதிரடிப்படையினர் ( STF ) இங்கு குவிக்கப்பட்டிருந்ததோடு மக்களை அச்சுறுத்தும் வகையிலும் விசேட அதிரடிப்படையினர் செயற்பட்டிருந்தனர் .
அண்மைகாலங்களில் நடைபெற்றிருந்த காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டங்களில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டிருக்கவில்லை . இந்நிலையில் முதல் தடவையாக இங்கு விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
ஈபிடிபி மற்றும் அங்கஜன் அணியினரைச் சேர்ந்த ஒருவரேனும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.