சட்டவிரோதமாக யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு இடம்பெற்றிருப்பதால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாநகர சபைக்கு முதல்வர் தெரிவாகியுள்ளதாக ஊடகங்களிலும் வர்த்தமானி பிரசுரத்திலும் யாழ்.மாநகர சபையின் முதல்வராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கபட்டுள்ளார்.
யாழ் மாநகர சபையின் முதல்வர் தொடர்பில் ஆரம்பம் தொட்டு சட்டவிரோதமாக செயற்பட்ட விடையமாகவே கருதுகின்றேன். திட்டமிட்ட நோக்கத்துடன் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஒருவரை நியமிக்கவேண்டும் என்கின்ற தேவைப்பாட்டின் அடிப்படையில் மாநகர முதல்வர் தெரிவு இடம்பெற்றிருக்கின்றது என்பதை நான் நம்புகின்றேன்.
உள்ளூராட்சி மன்றத்தின் சுற்று நிரூபம் ஒன்றில் இரண்டு முறைகள் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து வெல்லமுடியாது பதவி இழந்த ஒருவர் மீண்டும் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று சுற்று நிரூபம் இருக்கின்றது.
சட்டப்புத்தகங்களை குப்பையிலே எறிந்து விட்டு இந்த முதல்வர் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இலஞ்ச ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்வதிலிருந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.