யாழ் வலிகாமம் பகுதியில் தனது மகளின் சாமத்தியவீட்டை சிறப்பாகச் செய்வதற்காக கனடாவில் இருந்து வந்த குடும்பப் பெண் தனது சடங்கான மகளுடன் தலைமறைவாகியுள்ளார். கணவருடன் ஏற்பட்ட சண்டையின் பின்னரே குடும்பப் பெண் தனது மகளுடன் காணாமல் போயுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பப் பெண்னையும் மகளையும் காணவில்லை என பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
கடந்த வியாழன் இரவு தனது மனைவி தன்னுடன் சண்டையிட்டு தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அதன் பின்னர் அவரது தொடர்பு கிடைக்கவில்லை எனவும் கணவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். இதன் பின்னர் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மனைவி, ‘தான் கணவருடன் முரண்பட்டு தனது உறவுக்காரர் வீட்டில் தங்கியுள்ளதாகவும் தன்னைத் தேட வேண்டாம்’ என்றும் பொலிசாருக்கு அறிவித்துள்ளார். அத்துடன் தனது கணவர் தன்னை மது போதையில் கணவரின் உறவுகளுக்கு முன் தாக்கியதாலேயே தான் அவருடன் தங்கவில்லை எனவும் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
கனடாவுக்கு மீளச் செல்வதற்கான விமான ரிக்கட் திகதியில் தாம் கட்டுநாயக்காவுக்கு செல்வோம் என குறித்த குடும்ப பெண் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் யாழில் உள்ள பிரபல விடுதியில் பெருமளவு பணச் செலவில் குறித்த தம்பதியினர் தமது மகளுக்கு சாமத்திய சடங்கு செய்துள்ளதுடன் அந்த சடங்கில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் 2 ஆயிரம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான நினைவுப் பரிசுகளும் கொடுத்துள்ளார்கள். அத்துடன் அன்று இரவு கணவரின் உறவுக்காரரின் வீட்டில் வெளிநாட்டுச் சாராயத்துடன் கூடிய விருந்தும் மற்றும் இசை நிகழ்வும் நடந்துள்ளது.
இதற்கு அடுத்தநாளே கணவர் தனது மனைவியை தனது உறவுக்காரர் முன் தாக்கியதாக தெரியவருகின்றது. இதன் பின்னரே மனைவி மற்றும் மகள் கணவரை விட்டு பிரிந்து சென்றார்கள் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.