நிபந்தனை விதித்துள்ளது சர்வதேச நாணய நிதியம்!!
International Monetary Fund

அடுத்த வாரம், பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள், கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்தக் குழுவின் விஜயம் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அமைய உள்ளதாக இலங்கை தொடர்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீற்றர் புருயர் மற்றும் இலங்கை குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாகி ஆகியோர் தலைமையில் இந்தக் குழு வழிநடத்தப்படவுள்ளது.
இலங்கையின் பொதுக் கடன் நிலைத்தன்மையற்றது என மதிப்பிடப்படுவதால், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின், விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒப்புதலுக்கு, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக, இலங்கையின் கடன் வழங்குநர்களின் போதுமான உத்தரவாதங்கள் அவசியமாகும்.
இந்த விஜயத்தின்போது, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், ஏனைய பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டுக்கான, பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.