இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அண்மையில் இந்தியா சென்று திரும்பிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸை அடுத்து நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியா செல்லவுள்ளார் என்று அறியமுடிகின்றது.
அடுத்து வரும் சில தினங்களில் அமைச்சர் பஸில் ராஜபக்ச புதுடில்லிக்குச் செல்லவுள்ளார் என்று தெரியவருகின்றது.
இவரது இந்த விஜயம் தொடர்பில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புதுடில்லியில் இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவால் வழங்கப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் கடன் சலுகை தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது என உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்மானமிக்க நாட்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தனிப்பட்ட ரீதியிலும் ஆர்வம் கொண்டிருப்பது தொடர்பில் இந்திய நிதி அமைச்சருக்கு மிலிந்த மொறகொட நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றில் வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பித்து விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை கூட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.