நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த (உயர்தர) உயிரியல் பாட வினாத்தாளில் தமிழ்மொழி மூல மாணவருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களம் இதற்கான பரிகாரங்களைக் காண வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிரியல் பாட முதலாம் பகுதி வினாத்தாளின் தமிழ் மொழி பெயர்ப்பில் பாரிய குறைபாடுகள் இருந்ததால் மாணவர்களால் சரியான விடையெழுத முடியாத நிலையேற்பட்டதாக முன்னாள் பிரதம பரீட்சகர் ஒருவரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயர்தரப் பரீட்சையைப் பொறுத்தவரை அது மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற பரீட்சையாகும். எனவே, இப்பரீட்சை வினாத்தாள்கள் மயக்க நிலையிலன்றி தெளிவாக விளங்கிக் கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்.
அப்போது தான் மாணவர்களால் வினாவுக்கேற்ற விடைகளை எழுத முடியும். அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்றதற்கான பிரதிபலனை அடைய முடியும்.
இந்த வருட உயிரியல் வினாத்தாளின் பல வினாக்களின் மொழிபெயர்ப்பு பிழை காரணமாக மாணவர்களால் தெளிவாக விடையைத் தீர்மானிக்க முடியாத நிலையேற்பட்டதாகவும், இதனால் பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தமிழ் மொழி மூல மாணவருக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும். இது அவர்களது பல்கலைக்கழகத் தெரிவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த அநீதி கழையப்பட வேண்டும். பரீட்சைத் திணைக்களம் இந்த விடயத்தைக் கவனத்தில் கொண்டு உரிய பரிகாரம் காணப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
அல்லது இந்தப் பரீட்சையை இரத்துச் செய்து மீள் பரீட்சை நடத்தப்பட வேண்டும். ஒரு பரீட்சையைக் கூட சரியாக நடத்த முயடியாத அளவுக்கு இந்த அரசு மிகவும். பலவீனமடைந்துள்ளது.
பொருளாதார ரீதியாக மக்களை கஷ்டத்தில் தள்ளி அன்றாட உணவுக்கு அல்லல்படும் நிலையை ஏற்படுத்தியுள்ள இந்த அரசு இப்போது மாணவர்களின் எதிர்காலத்திலும் கைவைக்க ஆரம்பித்துள்ளது.
ஜனநாயகத்தை நேசிப்போரால் இதனை அனுமதிக்க முடியாது. தமிழ் பேசும் மக்களுக்கு நன்மைகள் பல செய்வதாகக் கூறி அவர்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் வந்து இந்த அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் தமிழ்மொழி மூல மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதி குறித்து வாய்மூடி மௌனமாக இருப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.
தமிழ் மொழி மூல மாணவருக்கு இழைக்கப்பட்டுள்ள இந்தப் பாரிய அநீதி குறித்து அவர்கள் கவனம் செலுத்தாது இருப்பது குறித்து நான் ஆச்சரியமடைகின்றேன். இது போன்ற விடயங்களில் தீர்வு பெற்றுத்தராத இவர்கள் இந்த அரசிடம் இருந்து தமிழ் பேசும் மக்களுக்கு என்ன தீர்வைப் பெற்றுத் தரப்போகின்றார்கள் என்று கேட்க விரும்புகின்றேன்.
எனவே, மக்களுக்கும் மாணவர்களுக்கும் அநீதி இழைக்கும் இந்த அரசாங்கத்தையும், தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களது உரிமைசார்ந்த விடயத்தில் கவனம் செலுத்தாது மௌனமாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது.
அதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்றார்.