யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கிறிக்கெற் அணியினருக்கும் சென்ஜோன்ஸ் கிறிக்கெற் அணியினருக்கும் பாரம்பரியமாக வருடாவருடம் நடைபெறும் வடக்கின் பெருந்துடுப்பாட்டப் போட்டி {21. 04. 2022 { நாளை } காலை 10 .00 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ச்சியாக மூன்ற நாட்கள் நடைபெறவுள்ளன. சென்ற வருடமும் கொரோனா பேரிடரால் நடத்த முடியாமலிருந்த இப்பெருந்துடுப்பாட்டச் சமரானது இவ்வருடம் ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பிற்போடப்பட்டு நாளை இச்சமர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பரி. யோவான் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லுர்ரி ஆகிய இரண்டு பாடசாலைகளும் இணைந்து இப்போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். அந்த வகையில் நாட்டின் அசாதாரண நிலை காரணமாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இரண்டு பாடசாலைகளும் இணைந்து சில விதிமுறைகளைத் தீர்மானித்துள்ளனர்.
அந்த அடிப்படையில் சில ஒத்துழைப்புகளை பாடசாலை நிர்வாகத்தினர் பழைய மாணவர்களிடம் எதிர்பார்க்கின்றனர். அதாவது போட்டிகளை பாடசாலையின் மைதானத்தினுள் சென்று பார்வையிடுவதற்கு பாடசாலையின் ஆசிரியர்கள் , மாணவர்கள் உட்பட நேரடியாக தொடர்புடையவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். ஏனையோர் டான் ரீ. வி தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரபபின் மூலம் வீட்டிலிருந்தே பார்வையிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு அதிபர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்விடயம் சார்ந்து பழைய மாணவர்கள் மற்றும் கிறிக்கெற் ஆர்வலர்களிடம் போதியளவு ஒத்துழைப்பினை வழங்குமாறு வேண்டிநிற்கின்றனர். நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த விதிமுறை இறுக்கமாக பின்பற்றப்படும் என்பதையும் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது எனவும் பாடசாலை நிர்வாகத்தின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
மேலும் இந்த வடக்கின் பெருந்துடுப்பாட்ட நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக உலகம் பூராகவும் பரந்து வாழும் யாழ். மத்திய கல்லுர்ரியின் மைந்தர்கள் என அழைக்கப்படும் பழைய மாணவர்கள் கூட்டாக இணைந்து பாடசாலையின் தேவைக்காக 80 இலட்சம் பெறுமதியான சொகுசு பேருந்து ஒன்றினை அன்பளிப்பு செய்துள்ளனர். இதனைக் கையளிக்கின்ற நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
அவ்வாறே, நாளைய தினம் துடுப்பாட்டத்தில் பங்குபற்றவுள்ள கிறிக்கெற் அணியினை உட்சாகப்படுத்தும் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது. அவ்வேளை கிறிக்கெற் அணியினை உட்சாகப்படுத்தும் ஒளித்தட்டு ஒன்றும் வெளியிடப்பட்டு போட்டியில் பங்குபற்றவுள்ள மாணவர்களை அதிபர் ஆசிரியர்கள் கைலாகு கொடுத்து உட்சாகப்படுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.