இலங்கைசெய்திகள்

எப்படி கண்ணாடிப் பொருட்கள் உருவாகின்றன!!

Glassware

கண்ணாடிப் பொருட்கள் மணலிலிருந்து உருவாக்கப்படுகின்றன! ஆம்! கடற்கரைகளிலும், ஆற்றுப்படுகைகளிலும், மற்றும் பிற பகுதிகளிலும் காணப்படும் மணலிலிருந்து கண்ணாடியை உருவாக்கலாம். வியப்பாக இருக்கிறதா?

சரி! இது எப்படி முடியும்? மணலை அதிவெப்ப நிலைக்குச் சூடாக்கி, உருக்கி, பாகு போன்ற நீர்ம நிலைக்குக் கொண்டுவந்து, பின்பு அதிலிருந்து பல வடிவங்களை வார்க்கிறார்கள் அல்லது வடிவமைக்கிறார்கள்.

1700 o செல்சியஸ் (அதாவது 3090 o ஃபாரன்ஹீட்) வெப்பநிலைக்கு மணலைச் சூடுபடுத்தினால், அது திட நிலையிலிருந்து உருகி பாகு போன்ற திரவ நிலையை அடைகிறது.
மணலை (சிலிக்கா) உருக்கும்போது அதனுடன் சோடா சாம்பல் (Soda Ash – சோடியம் கார்பனேட்) மற்றும் சுண்ணாம்புக்கல் (Limestone – கால்சியம் கார்பனேட்) சேர்க்கப்படுகின்றன. இதில் சோடா சாம்பல் சேர்ப்பதற்குக் காரணம், அது மணல் விரைவில் உருக வழி வகுக்கிறது. ஆனால், சோடா சாம்பல் சேர்ப்பதால், அது கண்ணாடியை நீரில் கரையும் தன்மையுடையதாக மாற்றிவிடும். இதைத் தடுக்கவே இரண்டாவது வேதிப்பொருளான சுண்ணாம்புக்கல் சேர்க்கப்படுகிறது. முடிவில் நமக்கு சோடா-சுண்ணாம்பு-சிலிக்கா கண்ணாடி கிடைக்கிறது.
பாகு போன்று உருகி, நீர்ம நிலையில் உள்ள மணலை வார்ப்புகளில் இட்டு அல்லது, குழாய்களைக் கொண்டு பலூன் போல் ஊதி, தேவைக்கேற்ப்ப பல்வேறு வடிவங்கள் கொண்ட கண்ணாடிப் பொருட்கள், கொள்கலன்கள், சாளரத்தகடுகள் போன்றவற்றை உருவாக்குகின்றனர்.
வெவ்வேறு வகையான பயன்பாடுகளுக்கு ஏற்ப, வேறுபட்ட தயாரிப்பு முறைகள், பிற வேதிக்கூட்டுப் பொருட்களின் கலவைகளைக் கொண்டு பலவகையான கண்ணாடிப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
கண்ணாடிகளாலான கட்டடங்கள், கண்ணாடிக்கதவுகள், சமையலறைப் பொருட்கள், ஊர்திகளில் பயன்படும் கண்ணாடிகள், தொலைக்காட்சித் திரைகள், கணிப்பொறி மற்றும் அலைபேசித் திரைகள், மூக்குக் கண்ணாடிகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், மிகக் கடினமான பல அடுக்கு கண்ணாடித் தகடுகள் போன்றவை அனைத்தும் இப்படித்தான் மணலிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button