இந்தியாசெய்திகள்

கீதா கோபிநாத் யாரென்று தெரியுமா!!

Geeta Gopinath

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (ஐபிஎம்) துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி, கொள்கை போன்றவற்றை தீர்மானிக்கும் அல்லது சரிசெய்யும் இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநராக ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டு இருப்பது தற்போது உலக அளவில் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

கேரளாவைச் சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த 1971 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தவர்தான் கீதா கோபிநாத். இவர் கொல்கத்தாவில் தனது பள்ளிப்படிப்பை முடித்து பின்னர் டெல்லி ஸ்ரீராம் காலேஜ் ஒவ் கொமர்ஸ் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். அடுத்து டெல்லி ஸ்கூல் ஒவ் எக்னாமிக்ஸ் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும் கடந்த 2001 ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது பிஹெச்டியை நிறைவு செய்துள்ளார்.

இதையடுத்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாகப் பணியாற்றிவரும் கீதா கோபிநாத், நோபல் பரிசுபெற்ற அமர்த்தியா சென்னிற்கு பிறகு 3 ஆவது இந்தியராக அந்தப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சர்வதேச அளவில் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவராக இருந்துவரும் கீதா கோபிநாத் அவ்வபோது இந்தியாவின் பொருளாதார நிலைமைகளைக் குறித்தும் கருத்து வெளியிட்டு வருகிறார்.

இதையடுத்து பொருளாதார வளர்ச்சியில் கீதா கோபிநாத்தின் பணிகளைப் பாராட்டி மத்திய அரசு விருதுகளை வழங்கி கவுரவித்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து வாஷிங்டனில் உள்ள ஐ.எம்.எப்-இன் தலைமை பொருளாதார ஆலோசகராக தேர்வுசெய்யப்பட்டு, பணியாற்றிவந்த  இவரின் பதவிக்காலம் ஜனவரி 2022 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருக்கிறது. இவருடைய கணவர் இக்பால் சிங் தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

இந்த நிலையில் தற்போது யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் கீதா கோபிநாத் ஐ.எம்.எப்-இன் துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். மேலும் ஐ.எம்.எப்-இன் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா என்பவர் செயல்பட்டு வரும் நிலையில் துணை நிர்வாக இயக்குநராக கீதா கோபிநாத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஐ.எம்.எப்-இன் இரு பதவிகளிலும் பெண்களே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Leave a Reply

Back to top button