“பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும், அது தொடர்பில் இலங்கைக்கு நாளாந்தம் தெளிவுபடுத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பாகிஸ்தானில் உயிரிழந்த பிரியந்த குமாரவின் பிள்ளைகள் மற்றும் குடும்பம் தொடர்பில் அரசு கரிசனை கொண்டுள்ளது. இழப்பீட்டைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பாகிஸ்தான் அரசுடன் பேச்சு நடத்தப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், நீதி நிலைநாட்டப்படும் எனப் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
விசாரணை தொடர்பில் இலங்கைக்கு நாளாந்தம் தெளிவுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது” – என்றார்.