வெளிநாட்டுப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது
இலங்கைக்கு வரும் பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு, பயணத்துக்கு முன்னரான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை அவசியமில்லையென சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நாட்டுக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் முழுமையான தடுப்பூசி பெற்றவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுவதோடு தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை உடன் வைத்திருத்தல் அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு முதலாவது தடுப்பூசி மாத்திரம் செலுத்தப்பட்டிருந்தாலும் அது முழுமையான தடுப்பூசி ஏற்றமாக கருதப்படும்.
அத்துடன் கடந்த 6 மாதங்களுக்குள் கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அதற்கான பரிசோதனை ஆவணங்களுக்கு முதலாவது தடுப்பூசியை மாத்திரம் பெற்றிருத்தல் போதுமானது.
எவ்வாறாயினும் முழுமையான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத ஏனையோர் 72 மணித்தியாலங்களுக்குள் பெறப்பட்ட கொவிட்-19 பரிசோதனை அறிக்கையை உடன் வைத்திருத்தல் வேண்டும் என சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.