அன்றும் – இன்றும் மாற்றம் என்ன?
” நாடாளுமன்றத்தில் ‘அப்பா’ (அமரர். ஆறுமுகன் தொண்டமான்) வருடம் ஒருமுறை உரையாற்றுவார்.
அதுவும் வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் தனது அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு உரையாற்றுவார். பெரும்பாலும் குறுகிய உரையாகவே அது அமையும். எப்படியும் 5 நிமிடங்களுக்குள் அமர்ந்துவிடுவார். (உரையின் ஏனைய அம்சங்கள் சபையில் சமர்ப்பிக்கப்படும்)
( ஆறுமுகனின் ‘வருடாந்த’ உரையைவிட அவர் உரையாற்றுவதே முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும். எப்படியும் தமிழ்ப் பத்திரிகைகளில் மறுநாள் முன்பக்க செய்தியாகக்கூட அது இடம்பெறும். ” தொண்டா உரையாற்றினார்” என்றுகூட இணைய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு மகிழும்.)
தனது ‘தம்பி சேர்’ சபையில் உரையாற்றுகையில் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் அவரின் அருகிலேயே அமர்ந்திருப்பார். இராஜதுரை எம்.பியும் சில சமயங்களில் இருந்துள்ளார். அந்த ஐந்து நிமிட உரைக்கு மேசையில் கைதட்டி உற்சாக வரவேற்பளித்து – மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார் ஐயா முத்துசிவலிங்கம்.
அதேபோல காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் மக்கள் கலரியில் அமர்ந்திருந்து தலைவரின் உரையை செவிமடுத்து ஆனந்தமடைவார்கள்.
இன்று மகன் (ஜீவன் தொண்டமான்) உரையாற்றினார். தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் அவரின் உரை 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது.
அமரர். ஆறுமுகன் தொண்டமானின் அருகில் அன்று முத்துசிவலிங்கம் அமர்ந்திருப்பதுபோல இன்று மருதபாண்டி ராமேஸ்வரன் ஜீவன் தொண்டமானின் அருகில் அமர்ந்திருந்தார். கொவிட் சூழ்நிலையால் சகாக்கள் சபைக்குவரமுடியாத சூழ்நிலை.
” மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் பெறுவதற்கு எதிர்ப்பார்த்தேன். ஆனால் அவர்கள் சபையில் இருக்கவில்லை. இதனை எனது அமைச்சாக நான் பார்க்கவில்லை. மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சாகவே பார்க்கின்றேன்.
ஆகவே, அவர்கள் முதலாவதாக பயணிக்கின்றனரா அல்லது நாங்கள் முதலாவதாக பயணிக்கின்றோமா என்பது முக்கியமில்லை. இது சமூகத்துக்கான பயணம். ஒன்றாகவே பயணிக்க வேண்டும்.” – எனக் குறிப்பிட்டு சிறப்பானதொரு துவக்கத்தை வழங்கினார் ஜீவன் தொண்டமான்.
விளக்கமளிப்பு, குற்றச்சாட்டு, விமர்சனம், ஒப்பீடு, நிராகரிப்பு, முன்மொழிவு, அழைப்பு, பதிலடி என பதிலுரைக்கான பிரதான அம்சங்கள் அனைத்தும் ஜீவனின் உரையில் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக மலையக பெருந்தோட்ட மக்களை ‘தாய், தந்தையர்’ எனவும் அவர் விளித்திருந்தார்.
இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத் திட்டம், மூன்றுக் கட்டங்களாக முன்னெடுக்கப்படும் எனவும், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தனதுரையில் ஜீவன் சுட்டிக்காட்டினார். வீடமைப்புத் திட்டத்தில் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற தவறுகள் இடம்பெறாதெனவும் அவர் உறுதியளித்தார்.
மலையக பகுதிகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளை மையப்படுத்தியே அடுத்தாண்டு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஜீவன் விவரித்தார்.
தனது அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் ஆங்கில மொழியில் நன்றிகூறி உரையை நிறைவு செய்தார்.
அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலும் தான்தான் என்ற மமதை காங்கிரசுக்கு இருந்தது. எனினும், எல்லா விதத்திலும் சவால் விடுக்கக்கூடிய மாற்று அணி இல்லாததால் ஏதேச்சாதிகாரம் கோலோச்சியது. அதன்பின்னர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் அது நீடித்தது. எனினும், தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமான பின்னர், கடும்போக்கை தொண்டமான் தரப்பு ஓரளவு கைவிட்டது.
தோட்டத் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு பதவிகள், தொழிலாளர்களுக்கு பதவிகள் என ‘கட்டமைப்பில்’ சில மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக 2019 ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் துடிப்புடனேயே செயற்பட்டார். வழமைக்கு மாறான மாற்றங்களை அவரிடம் காணமுடிந்தது. ஆனாலும் இடையில் அவர் உயிர் பிரிந்துவிட்டது.
மக்களுக்கான அரசியலை முன்னெடுத்தால்தான் நீடித்து நிலைக்கலாம் என்பதை ஜீவனும் இன்று உணர்ந்துள்ளார். அதனால்தான் காங்கிரஸின் தலைமைப்பதவியை குடும்பத்துக்குள் பங்கிட அவர் விரும்பவில்லை. இன்றைய ‘குடுமிச்சண்டை’க்கு இதுவும் காரணம்.
காங்கிரசுக்குள் குடும்ப ஆதிக்கம் கோலோச்ச ஆரம்பித்தவேளை, சிரேஷ்ட உறுப்பினர்கள் அதனை துணிவுடன் எதிர்க்கும் ‘ஜனநாயக’ சூழ்நிலைகூட தற்போது ஏற்பட்டுள்ளமை மகிழ்ச்சியே.
ஆக – தனது பயணத்தை ஏதோவொரு விதத்தில் இ.தொ.கா. மாற்றிக்கொண்டுள்ளது. ஜீவனின் இன்றைய உரையும் அதையே உணர்த்தியது.
ஆர்.சனத்