இலங்கைசெய்திகள்

விவசாயிகள் பிரச்சினைகளுக்கு உதவி செய்யுமாறு படையினர் பணிக்கப்பட்டுள்ளார்கள் – லெப்டினன்ற் அரவிந்த அபேரத்ன!!

famers

விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு உதவி செய்யுமாறு படையினர் பணிக்கப்பட்டுள்ளார்கள் என மட்டக்களப்பு 4வது கெமுனு பாதுகாப்புப் படைப்பிரிவின் உன்னிச்சைப் படை முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன்ற் எல்.ஆர்.டி அரவிந்த அபேரத்ன தெரிவித்தார்.

பசுமை விவசாய திட்டத்தின் தேசிய சேதனப் பசளை உற்பத்தி வாரம் ஆரம்ப நிகழ்வு ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதாஷிரீன் தலைமையில் ஏறாவூர் மீராகேணிக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை( 25) இடம்பெற்றது.

விவசாயத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மட்டக்களப்பு வடக்கு விவசாய உதவிப் பணிப்பாளர் எஸ். சித்திரவேல், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் லதாபிரியா ராஜ்குமார், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜெயரஜனி தவராஜா, எஸ். ஜனனி, ஏறாவூர் நகர சபை உறுப்பினர் எம்.சி.எம் றியாழ், நாற்று மேடை உற்பத்திப் பயிலுநர் எஸ். சுவர்னேஸ் உட்பட பிரதேச வீட்டுத் தோட்ட விவசாயிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய படை முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன்ற் அரவிந்த அபேரத்ன, இயற்கைப் பசளையை தயாரித்து அதனைப் பயன்படுத்தி வெற்றிகரமாக விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள முடியாத ஒரு குழப்பகரமான சூழ்நிலைதான் தற்போது இருந்து கொண்டிருக்கின்றது.

அதனால் இந்த செயற்திட்டத்தை அமுல்படுத்துவதில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனம்கண்டு, பிரச்சினைகளுக்கு மாற்று வழிகளைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.

அத்தகையதொரு பணியில் தற்போது இராணுவமும் இணைந்து கொண்டுள்ளது.

இயற்கைப் பசளைப் பாவனையின்போது விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு உதவி செய்யுமாறு படையினர் பணிக்கப்பட்டுள்ளார்கள். அதற்காக இராணுவத்தினர் எந்நேரமும் தயாரான நிலையிலேயே இருக்கின்றார்கள். எனவே விவசாயிகள் எதற்கும் தயங்க வேண்டியதில்லை.

எதிர்காலத்தில் இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாக செய்வதற்கு தற்போதிருக்கும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குள்ள சிக்கலான சூழ்நிலையிலிருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும். இந்த தகவலைத்தான் இராணுவத் தளபதி விவசாயிகளுக்கு எடுத்துரைக்குமாறு எங்களைப் பணித்திருக்கிறார்.” என்றார்.

நிகழ்வில் விவசாயிகளுக்கு இயற்கைப் பசளைச் செய்முறை காண்பிக்கப்பட்டதோடு நஞ்சற்ற விவசாயத்திற்கான ஆலோசனைக் கையேடும் கூட்டெரு உற்பத்திக்கான கையேடும் வழங்கி வைக்கப்பட்டன.

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button