அனுமதியின்றி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட மேலும் சில பொருட்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானியை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
இன்று நள்ளிரவு (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 270 முதல் 370 வரை இலக்கமிடப்பட்டுள்ள குறித்த பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் உரிய அனுமதியின்றி எந்தவொரு நபரினாலும் ஏதேனுமொரு நாட்டிலிருந்து இலங்கைக்குள் இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்படுவதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான முறையில் கையாள்வதற்காக குறிப்பிட்ட காலத்திற்கு இறக்குமதிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மத்திய வங்கியின் பரிந்துரைகளின்படி மூன்று கட்டங்களின் கீழ் இவ்வாறு இறக்குமதி கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முதல் கட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டத்தில், சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயமாகும். மூன்றாவது கட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி மற்றும் அனுமதிப்பத்திர முறை விதிக்கப்படும்.
இறக்குமதி கட்டுப்பாடு உத்திகள் நாட்டின் பொருளாதார நிலையை உகந்த முறையில் நிர்வகிக்கவும், சிறந்த நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்கவும் உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் நம்புவதாக, அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2017 நவம்பர் 09ஆம் திகதி 2044/40 அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுடன் இணைந்தவாறு மேலும் 100 பொருட்களை (இலக்கம் 270 -370) இறக்குமதி செய்வது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.