விடாமுயற்சியால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ரினோவன்!!
Exam
முயற்சி திருவினையாக்கும். முயன்றால் இயலாதது எதுவுமில்லை என்பதற்கு சான்றாக நம்முன்னே பலர் இருக்கவே செய்கின்றார்கள்.
அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட விவேகானந்தா வித்தியாலயத்தில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் குபேந்திரன் ரினோவன் திகழ்கிறார்.
விசேட தேவையுடைய மாணவரான இவர் நேற்றிரவு (25) வௌியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 160 புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் முதலிடத்தைப் பிடித்து சாதித்துள்ளார்.
ரினோவன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதுடன், இவரது தந்தை குபேந்திரன் ஒரு காவலாளியாக தொழில் புரிகிறார். தந்தை உழைத்து வாங்கிய Walker தனக்கு உதவியாக இருப்பதாக ரினோவன் கூறுகின்றார்.
நடக்க முடியாத தனது மகனை பாடசாலைக்கு சுமந்து செல்லும் தாய் கஜேந்தினி, தனது மகன் கல்வியில் சிறக்க தன்னாலான சகல முயற்சிகளையும் முன்னெடுக்கிறார்.
சகல வசதி வாய்ப்புகளும் வளங்களும் இருந்தாலும் சாதிக்க தவறுவோருக்கு மத்தியில் விடாமுயற்சியால் சாதித்துள்ள ரினோவன் போன்ற மாணவர்கள் வாழ்த்தி கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்.