அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் இதனை உண்ணுங்கள்…
அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழங்கு தான் உண்ண வேண்டும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் கிராம மக்கள் மரவள்ளி கிழங்கு, பச்சைப்பயறு, வற்றாளை போன்றவற்றை உட்கொண்டார்கள்.
பாண் சாப்பிடுவதற்குப் பதிலாக, மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுவது புற்று நோய்க்கும் சிறந்தது.
பச்சைப்பயறும் மோசமானதல்ல எனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நானும் ஒரு விவசாயி தான். இயற்கை உரத்தில் பயிரிட்டுள்ளேன். புதியவர்கள் இதைத் தொடர்ந்து செய்வதால் வெற்றிகரமாக அமையும் என்றும் முதல் பருவத்தில் ஓர் அனுபவமாக இருக்கும் என்றும் அறுவடை குறைவாக இருந்தால், கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பயப்படத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கை விவசாயத்தை யாரும் விரும்புவதில்லை என்பது தெளிவாகிறது. மக்களுக்குத் தரமான நச்சுத்தன்மையற்ற உணவை வழங்க வேண்டும். கடந்த காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் கூடாது என்று கூக்குரல் எழுப்பப்பட்டது.
இப்போது இரசாயன உரம் பெற வேண்டும் என்கிறார்கள். இதைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். நம் நிலத்தில் மரவள்ளிக் கிழங்கு நன்றாக விளைகிறது.
உள்ளூரில் 60க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகள் உள்ளன. பச்சை பயறு, கௌபி போன்ற பயிர்கள் பல உள்ளன. இவற்றைச் சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.
எங்களின் பணமும் இரசாயன உரங்களுக்கு அதிக செலவாகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.