நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் சுமார் 25 இலட்ச ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சமுர்த்திப் பயனாளிக் குடும்பங்களிலுள்ள இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி வழங்கும் ஆரம்ப நிகழ்வு ஏறாவூரில் செவ்வாய்க்கிழமை 01.03.2022 இடம்பெற்றது.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சமூர்த்திப் பயனாளிக் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 96 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஏ. அப்துல் நாஸர் கலந்து கொண்டு இப்பயிற்சி நெறியின் முக்கியத்தவம் பற்றி பயனாளிகளான இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தலா ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் செலவு செய்தே இந்த சாரதிப் பயிற்சி நெறி வழங்கப்படுகிறது.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளான இளைஞர்கள் பொறுப்பு வாய்ந்த முறையில் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்து வீட்டுக்கும் நாட்டுக்கும் பொருளாதார வளம் கிடைக்கக் கூடிய வகையில் உழைக்க வேண்டும். செலவு செய்யப்படும் இந்தத் தொகை பெண்கள் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றின் ஆயுட்கால வாழ்வாதார உதவித் தொகைக்குச் சமமாகும்.
ஆனால், அதனையும் விட சிறந்த முறையில் உழைத்து பொருளாதார வளத்தை ஈட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்” என்றார்.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம். ஹன்சுல் சிஹானா, ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தலைவர் எம்.ஐ. தஸ்லிம் உட்பட இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் – சக்தி