(நமது விசேட செய்தியாளர்)
“எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அவர்களின் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு அஞ்சி ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகமாட்டார்.”
- இவ்வாறு ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு, காலிமுகத்திடலில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் அமைச்சர் தினேஷ் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காலிமுகத்திடலில் விடுமுறை நாட்களில் பொழுதைக் கழிக்க வருவோரை ஒன்றுதிரட்டி ஜனாதிபதிக்கு எதிராகப் போராட வைத்துள்ளனர் எதிரணியினர்.
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாலும் திரண்டு ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு மிரட்டுகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அவர்களின் ஆதரவாளர்கள் நடத்தும் இந்தப் போராட்டங்களுக்கு அஞ்சி ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகமாட்டார்.
எமது ஜனாதிபதியோ, அரச தரப்பினரோ குறுக்குவழியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவில்லை. நாட்டு மக்களின் அமோக ஆதரவுடன்தான் அவர்கள் ஆட்சிப்பீடத்தில் ஏறினார்கள்.
எனவே, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதியோ அல்லது அரசோ பதவி விலகுவது தீர்வு அல்ல. இன, மத, மொழி, கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வைக் காணமுடியும்” – என்றார்.