“பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சபாநாயகர் குழு அமைத்துள்ளார். அதனைவிடுத்து இது தொடர்பாக உயர் நீதிமன்றம், சர்வதேச பாராளுமன்றத்துக்கு கொண்டுசெல்வதாக இருந்தால் அதனை முறையிடுங்கள். அதனை நாங்கள் எதிர்க்கமாட்டோம்.”
- இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற குழப்ப நிலை தொடர்பாக சபாநாயகர் குழுவொன்றை நியமித்தார். இது தொடர்பில் சபையில் ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் கருத்துத் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் தினேஷ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” நியமித்த குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் பலரும் கருத்து முன்வைத்தார்கள். சபாநாயகருக்கு உள்ள அதிகாரத்துக்கமைய இந்தக் குழுவை நியமித்துள்ளார். அதன் பொறுப்புகளையும் தெரிவித்தார். அதேபோன்று சபையில் பயன்படுத்தபட்ட வார்த்தைப் பிரயோகம் தொடர்பில் கட்சித் தலைவர் கூட்டத்தில் சபாநாயகர் தெரிவித்தார்.
அந்த வசனங்கள் உகந்ததல்ல என்பதால் சபையில் கூற முடியாது. நிலையியல் கட்டளையின் பிரகாரம் சபாநாயகரின் அறிவிப்பு உயர்வானது. அநுர பண்டாரநாயக்கவின் தீர்ப்புடன் அனைவரும் அன்று உடன்பட்டார்கள்.
சமல் ராஜபக்ஷவும் பாராளுமன்றத்துக்கே உச்ச அதிகாரம் இருப்பதை உறுதி செய்தார். நடந்த சம்பவங்களுக்குக் காரணமான வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் சபாநாயகர் தொடர்பில் பயன்படுத்திய வார்த்தைகள் தொடர்பில் வெட்கப்படுகின்றோம். சபாநாயகருக்கு உடனடியாகவோ அல்லது பாராளுமன்றம் கூடும் தினமொன்றிலோ அவரின் நிலைப்பாட்டை அறிவிக்கலாம். எந்த நிலையிலும் சபாநாயகர் ஒருபோதும் பொலிஸையோ வெளியாரையோ பாராளுமன்றத்துக்குள் அழைக்கவில்லை. எமக்குப் பாதகமான முடிவுகளைக் கூட அறிவித்துள்ளார்.
ஆனால், கடந்த ஆட்சியில் இருந்த சபாநாயகர் அடிக்கடி பாராளுமன்றத்தை ஒத்திவைத்து கூட்டம் நடத்தினார். எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
தேவையானவர்கள் உயர் நீதிமன்றத்துக்குச் செல்லலாம். சர்வதேச பாராளுமன்றத்துக்கும் செல்லலாம். அனை நாங்கள் எதிர்க்கவில்லை. தற்போதே சர்வதேச பாராளுமன்றத்துக்குக் கடிதம் அனுப்பி இருப்பதாகத் தெரியவருகின்றது” – என்றார்.
செய்தியாளர் – சுடர்