நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒமைக்ரொன் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
அத்துடன், மருத்துவ பிராணவாயு வழங்கப்பட வேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கையும் 8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக, கொழும்பில் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருவதாக அகில இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் கர்ப்பிணி தாதியர்கள் உட்பட 62 தாதியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஏனைய வைத்தியசாலைகளின் அதிகளவான பணிக்குழாமினருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது.