ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி கடந்த 12 ஆண்டுகளாக 91 நாடுகளை சுற்றி வந்துள்ளனர். இந்தப் பயணத்திற்கு அவர்கள் பயன்படுத்தியது ஒரு கார் மட்டுமே என்பதுதான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரைச் சேர்ந்தவர் தோல்பன். 39 வயதான இவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் எளிமையான வாழ்க்கை மற்றும் வித்தியாசமான ஊர்களைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். இவரைப் போலவே எழுத்தாளரான இவருடைய மனைவி மிகியும் (36) பல வித்தியாசமான கலாச்சாரங்களையும் இயற்கை கொஞ்சும் இடங்களையும் நேரடியாகப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் ஒத்தக் கருத்துடைய இந்தத் தம்பதிகள் உலகை சுற்றுவது என முடிவெடுத்து கடந்த 12 ஆண்டுகளாக இதுவரை 91 நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
தற்போது துபாயில் இருந்து கப்பல் மூலம் இந்தியாவிற்கு பயணம் செய்த இந்தத் தம்பதிகள் தங்களது சொகுசு காரை எடுத்துக் கொண்டு மும்பையில் இருந்து மாமல்லபுரம் வந்தடைந்துள்ளனர். மாமல்லபுரத்தின் வாசலில் இவர்களுடைய வாகனத்தைப் பார்த்த பொதுமக்கள் வித்தியாசமாக பார்க்கவே தோல்பன் மற்றும் மிகி தம்பதியினர் தற்போது இணயைத்தில் பேசுபொருளாகி இருக்கின்றனர்.
காரணம் ஊர் சுற்றுவது என முடிவெடுத்த இந்தத் தம்பதி பென்ஸ் வகையைச் சேர்ந்த ஒரு காரில் சோலாரை பொருத்தி அதன் எரிபொருள் டேங்கை 1,000 லிட்டர் நிரப்பும் அளவிற்கு பெரிதாக வைத்துள்ளனர். மேலும் அந்த வாகனத்தில் ஏசி பொருத்தப்பட்டு, நவீன குளியல் அறை, நவீன சமையல் அறை, ஓய்வெடுக்கும் பகுதி என அசத்தலாக வடிவமைத்துள்ளனர். இந்த வாகனம் மலைப்பாங்கான பகுதிகளில் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு எங்காவது வாகனம் பழுதாகி நின்றுவிட்டால் மெக்கானிக்கல் என்ஜினியரான தோல்பன் உடனே அதை சரிசெய்துவிடுகிறார்.
இப்படித்தான் தோல்பனும் அவருடைய மனைவி மிகி தங்களது 2 குழந்தைகளுடன் கடந்த 12 ஆண்டுகளில் 91 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர். வாகனத்தை தோல்பன் ஓட்ட, மிகி சமையல் வேலையைப் பார்த்துக்கொள்ள இந்த ஜோடி இதுவரை ஆஸ்திரியா, இத்தாலி, குரோசியா, ஆல்போனியா, கிரீஸ், இஸ்ரேல், இங்கிலாந்து, நார்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இலங்கை சுவிட்சர்லாந்து, ஜோர்டன், தென் அரேபியா, ஓமன், எமிரேட்ஸ், துபாய் எனப் பல நாடுகளுக்கு பயணம் செய்ததாகக் கூறியுள்ளனர்.
மேலும் தற்போது பணப் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்குச் செல்லும் அவர்கள் நன்றாக சம்பாதித்துக் கொண்டு மீண்டும் தங்களது பயணத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளனர். குறுகிய வட்டத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் நமக்கு இந்தத் தம்பதிகளைப் பார்க்கும் உண்மையில் ஆச்சர்யம் ஏற்படத்தான் செய்கிறது.