அண்மையில் கொழும்பின் பிரல பாடசாலை ஒன்றில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. கல்விசாரா ஊழியர் ஒருவரின் துஷ்பிரயோக நடவடிக்கையால் அது குறித்து மட்டுமல்லாது வேறு சில பிரச்சினைகளும் வெளிவந்திருந்தது. அதிபர் ஆசிரியர்களிடையேயான முரண்பாடு குறித்தும் தகவல் வெளியாகியிருந்தது. இது தொடர்பில் எமது இணையதளத்தில் செய்தி பிரசுரித்திருந்தோம். அதன் பிற்பாடு பகுதியளவான பெற்றோரால் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இப்பாடசாலை ஒரு பெண்கள் பாடசாலையாக இருப்பதனால் விரைந்து சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது கட்டாயமாக உள்ள நிலையில் இப்பாடசாலையின் பழைய மாணவிகளால் ஆசிரியர்களுக்கு ஆதரவாக எமது செய்திச் சேவைக்கு கண்டனம் தெரிவிக்கும் அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனை வாசகர்களுக்காகவும் அக்கறை உள்ள தரப்பினர் மற்றும் ஏனையோரும் மாணவிகளின் ஆதங்கத்தை அறிந்துகொள்ள வேண்டிய தேவையின் பொருட்டும் இங்கே பிரசுரித்துள்ளோம்.
“ஆசிரியர்கள் மீதான அவதூறுகளிற்கு எதிரான எமது வன்மையான கண்டனங்கள்”
“கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் என்ற வகையில் பாடசாலை தொடர்பான வதந்திகளிற்கு எதிரான எமது குரல் இது..
நாம் கல்வி கற்ற எமது கல்லூரி ஆசிரியர்களை பற்றிய தவறான WhatsApp வதந்திகளை கண்டு நாம் அதிர்ச்சியடைகின்றோம். கடந்த மற்றும் நிகழ் காலங்களில் கற்றல் மற்றும் இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவிகளை சிறப்பாக வழி நடத்துபவர்கள் எமது ஆசிரியர்கள்.
பாடசாலையை அபிவிருத்தி செய்வதாக காட்டி , பணத்தை மோசடி செய்த முன்னைய கும்பல்லிற்கு எதிராக துணிந்து நின்ற ஆசிரியர்கள் எம் ஆசிரியர்களாவர். இன்றைய மாணவ அனுமதியாகிய நாளைய இராமநாதன் சந்ததியினர் எவ்வித கையூட்டலும் இன்றி வறிய மாணவர்களும் இன்று கல்வி பயிலும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். கையூட்டல் கொடுத்து மாணவ அனுமதி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களிற்கே தெரியும் அதன் வேதனை, இதனை இல்லாமல் வேரோடு அறுக்க உதவியதும் எமது ஆசிரியர்கள் என்பதனை நன்றியோடு அரியத்தருகின்றோம்.
2014 ம் ஆண்டு எமது சாதாரண தர பரீட்சைக்கு முன்பாக வலய கல்வி பணிப்பாளர் “எமது பாடசாலை சமூகத்திலுள்ள பல சிறந்த பிரபல்யமான ஆசிரியர்களை கொண்டுள்ளது” என கூறியமை எம் ஞாபகத்திற்கு வருகின்றது. ஏனைய பாடசாலை மாணவர்கள் பலர் கூட எங்களிடம் இவ்வாறே பல முறை கேட்டுள்ளார்கள். எமது ஆசிரியர்கள்
பாடசாலை விளையாட்டுப்போட்டிகள் , கோயில் விழாக்கள் , பரிசளிப்பு விழாக்கள் அனைத்திலும் ஒன்றாக நின்று செயற்படுபவர்கள். இதிலும் விசேடமாக 2018 ம் ஆண்டில் கடமையாற்றிய முன்னாள் அதிபரால் மோசடி செய்யப்பட்ட 22 இலட்சத்திற்கும் மேலான பணத்தை வெளி நபர் உதவியுடன் பெற்று எமது பாடசாலைக்கணக்குக்கு மாற்றிய பெருமை இவர்களையே சாரும்.
அநியாயத்திற்கும் , மோசடிக்கும் எதிராக அச்சமின்றி குரல் எழுப்பும் அதே ஆசிரியர்களில் பெரும்பாலானோர் இன்னமும் பாடசாலையில் இருப்பதை நாம் நன்கு அறிவோம். பழைய மாணவிகள் ஒரு சிலர் தமது பதவிகளை 10 வருடத்திற்கு மேல் தக்க வைத்துக் கொண்டு பாடசாலை நலன்களை கருதாது, நடைபெறும் எல்லா வகையான அநீதிகளிற்கும் துணை நிற்பதனை , நியாயமான எண்ணம் கொண்டுள்ள பழைய மாணவிகளாக நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த சிறிய குழுவினர் கடந்த காலங்களில் OGA பொது சபையை கூட்டும்படி கேட்ட போது இரு வருடங்களாக தலைமறைவாக இருந்தனர்.
பாடசாலையில் அண்மையில் நடந்ததாகக் கூறும் மாணவியின் துஷ்பிரயோக சம்பவம் குறித்து தற்போதைய அதிபரின் நடவடிக்கை எமக்கு அதிருப்தி அளிக்கின்றது.
மூன்று ஆசிரியர்களால், சம்பவத்தின் உண்மைத்தன்மை நேர்மையாக விசாரிக்கப்பட்டு , எழுத்து மூலமான அறிக்கை அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைவாக குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிராக எந்த நடவடிக்கையேனும் அதிபர் மேற்கொள்ளவில்லை. அதனை எதிர்த்து, முறையான விசாரணை மேற்கொள்ளும் படி நாற்பதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கையொப்பமிட்டு வேண்டுகோளினை முன் வைத்தனர். கையொப்பமிட்ட ஆசிரியர்களை அதிபர் தன் அலுவலகத்திற்கு அழைத்து தன்னிச்சையாக கண்டித்தமை கேலிக் கூத்தைப் போன்றது. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதனைத் தவிர்த்து அதனை அதிகரிக்கும் வகையில் செயற்பட்டார். இன்று இவ்விடயம் பெற்றோர் மத்தியில் பூதாகரமானதாக வெடித்திருக்கின்றது.
நியாயம் அறியாது , உண்மை புரியாது ஒரு சில பழைய மாணவிகள் மற்றும் சிலர் பெற்றோரின் போராட்டத்துடன் இணைத்து ,
ஆசிரியர்கள் மீது அவதூறு கூற முயற்சிப்பது கண்டிக்கத் தக்கதாகும்.
கல்வி அமைச்சிற்கும் எம் கல்வி சமூகத்திற்கும் கடந்த கால ,நிகழ் கால சம்பவங்கள் தொடர்பான வினாக்களை முன் வைக்கின்றோம்.
· 🔸 சுமார் 40 ஆசிரியர்கள் செய்த முறைப்பாட்டை தவிர்த்து, ஒரு கல்வி சாரா ஊழியரின் தவறினை மறைக்க அதிபர் முற்பட்டதன் காரணம் என்ன ?
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப் பட்ட மாணவியின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் , ஏனைய பாடசாலை மாணவிகளின் பாதுகாப்பினை உறுதிப் படுத்தும் வகையிலும் அதிபர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் பின்னணி என்ன?
· 🔸பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையாரிடம், தாமாகவே தமது மகளை பாடசாலையை விட்டு நீங்கிக் கொள்வதாக கடிதத்தினை கேட்டு, எழுதி எடுக்கும் அதிகாரம் அதிபருக்கு யார் கொடுத்தது ? பாதிக்கப்பட்ட (தாயற்ற) மாணவியின் சொந்தக்கல்விச் சுதந்திரத்தை அதிபர் எவ்வாறு நிராகரிப்பார் ?
🔸 எமக்கு பெற்றோர் சுட்டிக்காட்டியதற்கமைய, பாடசாலையில் மாணவ வகுப்புகளிற்கு பாரிய பற்றாக்குறை நிலவும் நிலையில் நான்கு வகுப்பறைகளை அதிபர் தமது வதிவிடமாக மாற்ற அனுமதி கொடுக்கப்பட்டது ஏன் ? எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது ?
· 🔸 கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட 100 ற்கும் மேற்பட்ட TABS ஒரு வருடத்திற்கு மேற்பட்ட பின்னரும் இன்னமும் வழங்கப்படாமல் வைத்திருப்பது ஏன் ?
· 🔸இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள் மீது அவதூறு கூற OGA இன் ஒரு சிறு குழுவை பயன்படுத்த முயற்சிப்பது யார்? ஏன்?
· 🔸பாடசாலை நிர்வாகத்தினைச் சீர்குலைப்பதன் பின்னணியில் மோசடி செய்த முன்னாள் அதிபரின் பெரும் பங்குள்ளதாக பெற்றோர் கூறுவதன் பின்னணி என்ன ?
🔸அண்மையில் ஊடகங்களில் தான் ஓரு பொறியியலாளர் எனக் கூறி பேட்டியளித்த பெண்மணியின் பிள்ளைகள் இருவரும் எவ்வளவு காலமாக எமது பாடசாலையில் கல்வி கற்கின்றார்கள்? என்பதையும், அதற்கு முன்னர் எங்கு கல்வி கற்றார்கள்? என்பதையும் ,முன்னர் அப் பிள்ளைகள் கல்வி கற்ற பிரபல கொழும்பு பெண்கள் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் பற்றி இவரால் முன்பு கூறப்பட்ட தவறான கருத்துக்களுக்கு ஊடாக அப்பெண்மணியின் முரணான நடத்தை பற்றி நாம் விளங்கிக் கொள்வது என்ன?
· 🔸பாடசாலை Founders day பாடசாலையை நிறுவிய Founders ற்கு அழைப்பு விடுவிக்காமல் நடத்தப்பட்டது ஏன்? என்பதை ஆராய்ந்து, இப்பாடசாலையின் பெயரிற்கு களங்கம் ஏற்படாத வகையில் குறைபாடுகளை நீக்கி தமிழ் மாணவிகளின் பெருமை மிக்க பாடசாலையினை பாதுகாப்போம்.”
கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள்.
அதிபர் மற்றும் அசிரியர்கள் இருவரும் பாடசாலையின் கல்விச் செயற்பாட்டில் சம பங்கு வகிபாகம் கொண்டவர்கள். இருவரும் புரிந்துணர்வுடன் நடக்கவேண்டியது பாடசாலை வளர்ச்சிக்கு அவசியமானதாகும்.
இவ்விடயம் தொடர்பில் நாம் இரண்டு முறை எமது இணையதளத்தில் செய்தி பிரசுரித்துள்ளோம். கல்வி அமைச்சு இவ்விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் இது தொடர்பிலான தகவல்கள் எமது செய்திப்பிரிவிற்கு வந்த வண்ணமே இருக்கும். பாரபட்டமற்ற ஒரு சரியான தீர்வு கிட்டும் வரை இவ்விடயம் குறித்த அழுத்தங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். சம்பந்தப்பட்ட தரப்பினர் இவ்விடயத்தில் அக்கறைகொண்டு நடவடிக்கை எடுக்குமாறு எமது செய்திச்சேவையும் பரிந்துரைக்கின்றது.