சீனாவின் பெய்சே நகரில் ஒமைக்ரான் வகை கொரோனா காரணமாக அந்த நோய்த்தொற்று அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, அந்த நகரில் கடுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அந்த நகரில் புதிதாக 135 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிரான ‘பூஜ்ஜிய-சமரச’ கொள்கையைக் கடைப்பிடித்து வரும் சீன அரசு, பெய்சேவில் பொதுமுடக்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, அந்த நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; அத்தியாவசியற்ற தொழில் நிறுவனங்கள், கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது; நகரவாசிகளுக்கு மிகப் பிரம்மாண்டமான அளவில் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவங்களில் வாடிக்கையாளா்கள் அமா்ந்து சாப்பிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநா்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில், சாலை விளக்குகளில் சிவப்பு விளக்கு மட்டுமே எரிய உத்தரவிடப்பட்டுள்ளது.