தமிழகத்தில் விதிகளை மீறி தங்கியிருந்த இலங்கைப் பெண்ணுக்கு நாடுதிரும்ப அனுமதி வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 16 வயது பெண் ஒருவர், உரிய அனுமதியுடன் கடந்த 2018 ஏப்ரல் 17 ஆம் திகதி தமிழகத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
எனினும், அனுமதி காலம் முடிவடைந்த பின்னரும், அவர் இலங்கை திரும்பாததை அடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி கைதுசெய்துசெய்யப்பட்ட குறித்த பெண், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம், 56 நாட்களின் பின்னர் குறித்த பெண்ணுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டபோதும், சென்னை – புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் விடுக்கப்படவில்லை.
இதையடுத்து, தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்பேரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர், உறவினர் வீட்டில் தங்கியிருந்த குறித்த பெண், இலங்கைக்குச் செல்ல அனுமதி வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, தாம் விடுவிக்கப்பட்ட பின்னரும், காவல்துறையின் நடவடிக்கைகள் காரணமாக, சொந்த நாட்டுக்குச் செல்ல அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காவல்துறையினரின் நடவடிக்கைகளை இரத்துச் செய்து, சொந்த நாட்டுக்குச் செல்ல தம்மை அனுமதிக்கவேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.
இதனைப் பதிவுசெய்த நீதிபதி, விதிகளை மீறி தங்கியிருந்தமைக்கான அதிகபட்ச தண்டனை ஓராண்டு காலம் மட்டுமேயாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மனுதாரர் 100 நாட்கள் சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டார்.
இதுவே, அவருக்கு அதிகபட்ச தண்டனை என்பதால், காவல்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் இரத்துச் செய்யப்படுகின்றன.
அத்துடன், மனுதாரர் இலங்கை செல்வதற்காக, வெளிநாட்டவர்களுக்கான மண்டலப் பதிவு அலுவலர் உடனடியாக அனுமதி வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.