ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தைகள் பிரித்தானியாவின் புதிய தலைவரை வரவேற்பதற்கான அடையாளமாக இது பார்க்கப்படுகிறது.
சென்ற மாதம் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையின் மினி பட்ஜெட்டைத் தொடர்ந்து, அமெரிக்க டொலருக்கு எதிரான பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வகையில் கடும் வீழ்ச்சியடைந்தது.
லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து சற்றே உயர்ந்த பவுண்டின் மதிப்பு, பின்னர் மீண்டும் குறைந்தது.
ஆனால், ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கியதைத் தொடர்ந்து, 1.11 டொலர்களாக இருந்த பவுண்டின் மதிப்பு, திங்கட்கிழமை, 1.135 டொலர்களாக உயர்ந்தது.
இந்நிலையில், ரிஷி பிரதமராக பொறுப்பேற்றதும், ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு உயர்ந்துள்ளது.
டொலருக்கு எதிரான பவுண்டின் மதிப்பு 1.92 சதவிகிதம் உயர்ந்து 1.150 டொலர்கள் வரை எட்டிய நிலையில், தற்போது அதன் மதிப்பு 1.147 டொலர்களாக ஆகியுள்ளது.
செப்டம்பர் 15க்குப் பிறகு, 1.150 டொலர்கள் என்பதுதான் பவுண்டின் மிக உயர்ந்த மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.