கட்டுரைசெய்திகள்

ஆண்பிள்ளைகள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டியவைகள்!!

Boys

• ஐந்து முதல் எட்டு வயதுக்குள் நீச்சல் சொல்லிக் கொடுங்கள். தன்னை காத்துக் கொண்டு, பிறரையும் காப்பாற்ற முடியும்.

• சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்க காட்டும் ஆர்வத்தில், ஒரு பங்காவது நீச்சல் சொல்லி தரவும் காட்டுங்கள். ஏனெனில் இரண்டுமே, உடம்பை பேலன்ஸ் செய்தால் தான் வரும்.

• பத்து வயதில், ஒரு குக்கரில் சாதம் வைக்க, காய்கறி நறுக்க பழக்குங்கள்.

• பின்பு மெல்ல மெல்ல One Pot One Shot (OPOS) சமையல் முறையை பரிச்சயப்படுத்துங்கள். சிம்பிளா ஒரு கலந்த சாதம் – தேங்காய், எலுமிச்சை, வெஜ் ரைஸ், தக்காளி சாதம் செய்யும் சமையல் முறை தான் இது.

• பிரட் ஆம்லெட் போட சொல்லிக் கொடுங்கள். கையில் பிங்க் நிற 2000 ரூபாய் நோட்டுகளோ, பச்சை வர்ண டாலர்களோ கத்தையாக இருந்தாலும், சில இடங்களில் ரொட்டி தவிர எதுவும் கிடைக்காது.

• தான் சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அதுக்கு நீங்க, முதலில் உங்க தட்டை கழுவனும்.

• சமைத்த பாத்திரங்களையும், கழுவ சொல்லிக் கொடுத்தால் போனஸ். பையன் எதிர்காலத்தில் நல்ல பொறுமைசாலியாக திகழ்வான்.

• பையனின் மேட்ரிமோனி பக்கத்தில் உள்ள “இன்ன பிற தகுதிகள்” என்ற இடத்தில் “சமைக்க தெரியும், பாத்திரம் கழுவவும் தெரியும்” என்று நிரப்பி இருந்தால், இப்பவே பெண்ணை பெற்றவர்கள் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சம்பந்தம் பேச வருகிறார்களாம். இன்னும் பத்து வருடம் கழித்து சொல்லவே வேண்டாம். “ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது” என்று உங்கள் மகன் பாடுவார்.

• வாசித்தல் என்ற போதை பழக்கத்தை ஏற்படுத்துங்கள். முடிந்தால் வீட்டில் ஒரு நூலகம் அமைக்க உதவுங்கள்.

• அப்பா அம்மாவுக்கு மாதாமாதம் பணம் கொல்லைப்புற வேப்ப மரத்தில் காய்க்கவில்லை என்று தெரியப்படுத்துங்கள்.
15 வயதில் அவர் தனியாக சேமிக்க வழி செய்யுங்கள்.

• பேருந்து, மின்சார ரயில் என எதிலும் பைசா கோபுரம் போல சாயாமல் இரண்டு கால்களில், தஞ்சை பெரிய கோவில் போல நேராக நிற்க சொல்லிக் கொடுங்கள்.

• கோபம் வந்தால், எதிராளியின் தாயை, தமக்கையின் மானத்தை குறிக்கும் வசைச் சொற்களை பயன்படுத்துவது தமிழுக்கு இழுக்கு என்று சொல்லிக் கொடுங்கள். அது வட்டார வழக்குமல்ல, அவரது இயலாமையே.

Dr ஆறுமுகம் கணேசன்

Related Articles

Leave a Reply

Back to top button