ஆசிரியத்துவம் மேலோங்க அதன் பெருமையை எடுத்தியம்பி உலகளாவிய ரீதியில் எடுத்துக்காட்டாகியுள்ள யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன் 2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Cristal Pen விருதினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
விசேடமாக கொவிட் -19 இடர் காலத்தில் தலை சிறந்த அர்ப்பணிப்புடன் எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி கற்பித்தலில் புத்தாக்க முறைமைகளைப் புகுத்தி நிகழ்நிலை கற்பித்தலில் மாணவர்கள் வெற்றிகரமாக ஈடுபடுவதற்கான வழிவகைகளைக் கையாண்டு மாணவர்களைக் கல்வியின் பால் தூணடுவதன் மூலம் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் கல்விப் பணியாற்றியமைக்காகவும் உலகின் அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் தனது சொந்த செலவில் நவீன கற்றல் சாதனங்களை வீட்டில் பொருத்தி [smart digital panel] இலவசமாக ஆசிரியப் பணியினை முன்னெடுத்தமைக்காகவும் இவ்விருது வழங்கப்படுகிறது.
இத்தாலியை பிரிதிநிதித்துவமாக கொண்ட பல்தேசிய கூட்டு நிறுவனம் என்னும் இவ்அமைப்பானது 160 நாடுகளில் உள்ள ஆசிரியர்களைத் தெரிவுசெய்து இறுதிக்கட்ட தெரிவில் 20 பேரை கம்பனியின் உள்வாரியாகவும் இறுதி தெரிவில் 10 பேரை கம்பனிக்கு அப்பால் வெளிவாரியாகவும் மதிப்பீடு செய்திருந்தது. இறுதி பத்து பேர்களில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இவர் ஒருவர் மட்டுமே தெரிவாகியுள்ளமை ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கே கிடைத்த பெருமையாகும். இன்று இலங்கையில் ஆசிரியர்கள் பல சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கும் நிலையில் இவரது இந்த வெற்றி ஆசிரிய சமூகத்திற்கே கிடைத்த ஒரு பெருவெற்றி என்றுதான் சொல்லவேண்டும்.
ஆசிரியர் இரமணன் மூதூர் மத்திய கல்லூரி, கண்டி அல்மனார் தேசிய பாடசாலை [3 வருடங்கள்] யாழ் மத்திய கல்லூரி [8 வருடங்கள்] ஆகிய பாடசாலைகளில் பணியாற்றி தற்போது யாழ் இந்துக் கல்லூரியில் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றார். இவர் யாழ். மத்திய கல்லூரியின் தொழிற்கல்வி பிரிவு பகுதி தலைவராக இருந்து மாணவர் திறன் விருத்திச் செய்ற்பாடுகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளார்.
ஐவின்ஸ் இணையதளம் அவரைத் தொடர்புகொண்டு இவ்வெற்றி பற்றி வினவிய போது, தான் கற்பித்த பாடசாலைகளின் அதிபர்களின் வழிகாட்டல் தனக்கு மிக உதவியாக இருந்தது எனவும் அதிலும் குறிப்பாக 28 வருட அனுபவம் வாய்ந்த மத்திய கல்லூரியின் அதிபர் எழில்வேந்தன் அவர்களிடம் பணியாற்றியமை மற்றும் இந்துக்கல்லூரி அதிபர் ஒவ்வொரு விடயங்களையும் சொல்லித்தந்து செயற்பட ஊக்கமளித்தவை போன்ற விடயங்களே தன்னுடைய இந்த வெற்றியின் அடித்தளம் எனவும் யாழ். இந்துக்கல்லூரியின் அதிபருக்கு இதில் முக்கிய பங்குண்டு எனவும் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கொவிட் பேரிடர் காலத்தில் ஆசிரியர்கள் பலரும் அதிக அர்ப்பணிப்புடன் சேவை புரிந்துள்ளனர். அவர்கள் அத்தனைபேரும் இந்த விருதிற்கு பங்குள்ளவர்களே. இது தனி ஒருவருக்கான வெற்றி கிடையாது, தனி ஒருவரின் சாதனை கிடையாது . ஆசிரிய சமூகத்தின் வெற்றி. ஒரு கூட்டிணைவான வெற்றி எனத்தெரிவித்துள்ளார்.
ஆசிரிய சமூகத்தை உயர்த்தி மகோன்னத வெற்றியைத் தனதாக்கியுள்ள ஆசிரியர் இரமணன் அவர்களை ஐவின்ஸ் இணையதளமும் மகிழ்வோடு பாராட்டுகின்றது.
மேலும் இவ்விருதின் பிரகாரம் யாழ் இந்துக் கல்லூரிக்கு 5000 யூரோ பணமும் (ரூ. 1 150 000.00) 1000 அமெரிக்கடொலர் பெறுமதியான பொருட்களும் நன்கொடையாக வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.